மிகுந்த எதிர்பார்ப்புடனும் கடுமையான போட்டியுடனும் நடைபெறும் இந்தப் பொதுத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலே வியப்புகளுடன் தொடங்கியது.
2011ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக ஒரு தொகுதி போட்டியின்றி மக்கள் செயல் கட்சி வசமானது அவற்றுள் மிக முக்கியமானது. இதனையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 97 இடங்களில் 92 இடங்களுக்கு மக்கள் வாக்களிப்பர்.
கடைசி நேரத்தில் முக்கியப் புள்ளிகளின் ஓய்வை அறிவித்தது, தொகுதி மாறியது என்று மக்கள் செயல் கட்சியின் தேர்தல் வியூகம் எவரும் எதிர்பார்க்காதது.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஆகியோர் களமிறக்கப்படுவார்களா என்பதை கடைசி நேரம் வரை மர்மமாக வைத்திருந்தது மசெக. வேட்புமனுத் தாக்கல் நிலையத்திற்கு வந்து தங்களது ஓய்வை அவ்விருவரும் அறிவித்தது எதிர்பாராத திருப்பம்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மனாப்பை அதன் தெம்பனிஸ் குழுத்தொகுதி அணிக்குத் தலைமையேற்க வைத்து பாட்டாளிக் கட்சியும் தன் பங்குக்கு அரசியல் சாணக்கியத்தைக் கையில் எடுத்துள்ளது.
கிழக்குப் பகுதியில் தன் செல்வாக்கை விரிவுபடுத்த பாட்டாளிக் கட்சி முக்கிய வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய பொங்கோல் தொகுதியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மசெக அணிக்கு எதிராக பலரும் அறிந்த புதுமுகமான ஹர்பிரீத் சிங் உள்ளிட்ட அணியை அக்கட்சி நிறுத்தியுள்ளது. இதனால், அத்தொகுதியில் கடுமையான போட்டியையும் அனல்பறக்கும் பிரசாரத்தையும் எதிர்பார்க்கலாம்.
பாட்டாளிக் கட்சி தனது புதுமுகங்களில் ஒருவரான முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் யீ ஜென் ஜோங்கிடம் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடாமல் மசெகவுக்கு உடனடி வெற்றியை அளித்திருப்பதும் அரசியல் பார்வையாளர்கள் கணித்திராத ஒரு திருப்பம். அத்தொகுதியின் ஐந்து உறுப்பினர்களும் போட்டியின்றித் தேர்வுபெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வழிநடத்துவார் என்று ஊகிக்கப்பட்ட நிலையில், அவர் சுவா சூ காங் குழுத்தொகுதியில் களமிறங்குகிறார்.
1991 தேர்தலுக்குப் பிறகு ஐந்து தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிலவுவதும் இந்தத் தேர்தலில்தான். சிங்கப்பூர்த் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அங் மோ குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ராடின் மாஸ், மவுண்ட்பேட்டன் என இரு தனித்தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மொத்தமுள்ள 33 தொகுதிகளில் ஒன்றில் வெற்றிபெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 92 இடங்களிலும் மசெகவிற்குப் போட்டி காத்திருக்கிறது. அக்கட்சியினருக்கு எதிராக இரு சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 114 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஆகப் பெரிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி 8 தொகுதிகளில் 26 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் சீர்திருத்த மக்கள் கூட்டணியும் தலா 13 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. மொத்தம் 206 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், 50க்கும் மேற்பட்ட பிரசார இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

