சுற்றுப்பயணத் துறையில் ஏறக்குறைய 4,000 வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சிங்கப்பூரில் விருந்தோம்பல் துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும். நீடித்த நிலைத்தன்மை மிக்க சுற்றுப்பயணம், நகர்ப்புற ஆரோக்கியம் சார்ந்த இடமாகத் திகழ்வதற்கான சிங்கப்பூரின் முயற்சிக்கு இவர்கள் கைகொடுப்பர்.
சுற்றுப்பயணத் துறை மீட்சிகாணும் வேளையில் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆள்சேர்ப்பில் முனைந்துள்ளன. நீடித்த நிலைத்தன்மை, ஆரோக்கியம் ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவற்றுக்கான திறன் தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் கொள்கைத் திட்டமிடல் குழுவுக்கான துணைத் தலைமை நிர்வாகி ஜீனி லிம் கூறினார்.
நீடித்த நிலைத்தன்மை மிக்க பொருள்கள், உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கான தேவை தொடர்ந்து விரிவாக்கம் காண்பதால் பசுமை சார்ந்த புதிய வேலைகளுக்கான தேவை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார். கரியமில கணக்காளர், நீடித்த நிலைத்தன்மை மேலாளர் போன்ற பதவிகளை அவர் சுட்டினார்.
தற்போதுள்ள வேலைகளும் உருமாற்றம் காணும் என்றார் திருவாட்டி லிம். சுற்றுப்பயணத்துறை உருமாற்றம் 2023 எனும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களும் இணைந்து விருந்தோம்பல் துறை, சுற்றுப்பயணத் துறை ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த வேலைவாய்ப்புச் சந்தை அது. நிகழ்ச்சி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வியாழக்கிழமை (ஜனவரி 19) நடைபெற்றது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி ஏறத்தாழ 65,000 பேர் சுற்றுப்பயணத் துறையில் பணியாற்றினர். இது கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 78 விழுக்காடு.
உலகளவில் சுற்றுப்பயணிகளிடையே நீடித்த நிலைத்தன்மை மிக்க பயண வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றார் திருவாட்டி லிம். அதனால் புதிய வேலைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் கூடியுள்ளன.
ஐந்தாம் முறையாக இடம்பெறும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில், மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப், பிக்கோ ஆர்ட் நிறுவனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் காட்சிக்கூடங்களை அமைத்திருந்தன.

