புனித வெள்ளி வாரயிறுதியில் 436,800 பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்

புனித வெள்ளி வாரயிறுதியில் 436,800 பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்

1 mins read
21082d25-b3be-48ea-bf68-3641cc762752
புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை இரவு உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

புனித வெள்ளி வாரயிறுதியில் ஏறக்குறைய 436,800 பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமைக்கும் (ஏப்ரல் 15) ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாதை வழியாக எல்லையைக் கடந்தோர் எண்ணிக்கை, இதற்கு முந்தைய வாரத்தில் இதே நாள்களுடன் ஒப்புநோக்க கிட்டத்தட்ட 25 விழுக்காடு அதிகம்.

புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு, மலேசியாவுக்குச் செல்ல கடந்த வியாழக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். அன்றைய தினம் மட்டும் 112,700 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாதை வழியாக 242,500 பயணிகள் சிங்கப்பூர் வந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தது.

அவர்களில் 79,200 பேர் பேருந்துகளில் அல்லது நடைப்பயணமாக இங்கு வந்தனர். 105,300 பேர் கார்களிலும் 58,000 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் வந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து 194,300 பேர் மலேசியாவுக்குப் புறப்பட்டனர். அவர்களில் 61,900 பயணிகள் பேருந்துகளில் அல்லது நடைப்பயணமாக மலேசியா சென்றனர். 77,600 பேர் கார்களிலும் 54,800 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் சென்றனர்.