மரினா பேயில் புத்தாண்டுக் கொண்டாட்டம்: பாதுகாப்புப் பணியில் 700 அதிகாரிகள்

மரினா பேயில் புத்தாண்டுக் கொண்டாட்டம்: பாதுகாப்புப் பணியில் 700 அதிகாரிகள்

3 mins read
b231a6a8-80a5-4ed0-8957-1bdbdc98d294
எஸ்பிளனேட்டுக்கு வெளியே காவல்துறை பாதுகாப்பு கண்காணிப்புக் கருவிகளை அமைக்கும் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புத்தாண்டை வரவேற்க வரும் சனிக்கிழமை மாலை மரினா பேயில் ஆயிரக்கணக்கானோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 6 மணியிலிருந்து அவ்விடத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதும் என்பதால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளைக் காவல்துறை செய்து வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரினா பே வட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் 700க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நடவடிக்கை தளபத்தியம், பாதுகாப்பு தளபத்தியம், பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியம், கடலோரக் காவல்படை, போக்குவரத்து காவல்துறை, அவசரகாலச் சேவைப் பிரிவு, வான்வழி நடவடிக்கைப் பிரிவு, நிலவழி நடவடிக்கைப் பிரிவு ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் மரினா பே வட்டாரத்தில் நிறுத்தப்படுவர்.

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மரினா பே வட்டாரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாணவேடிக்கை ரத்து செய்யப்பட்டது. மக்கள் அங்கு கூடாமல் இருக்க அவ்வாறு செய்யப்பட்டது.

இதற்கிடையே, இவ்வாண்டு மரினா பேயில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்வோர் வாணவேடிக்கையைக் கண்டு மகிழலாம். புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கிட்டத்தட்ட ஏழு நிமிடங்களுக்கு வாணவேடிக்கை வானத்தை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பல உணவகங்களில் உணவருந்த பலர் முன்பதிவு செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு உணவருந்திக்கொண்டே வாணவேடிக்கையைப் பார்த்து ரசிக்கலாம்.

மரினா பே புத்தாண்டு கொண்டாட்டத்தை நேரில் காண வருவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலை இம்முறை எட்டப்படும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு அந்தக் கொண்டாட்டத்தில் ஏறத்தாண 300,000 பேர் கலந்துகொள்வது வழக்கமாக இருந்தது.

அதிக கூட்டத்தை எதிர்பார்ப்பதால் மேம்படுத்தப்பட்ட சுற்றுக்காவல் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவர் என்று மத்திய காவல்துறை பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹோ வீ ஃபாங் தெரிவித்தார்.

அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலைத் தவிர்க்க மரினா பே வட்டாரத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கையை காவல்துறை கட்டுப்படுத்தும் என்று அவர் கூறினார். வழக்கமான பயணப் பாதைகள் மாற்றப்படும் என்றும் சில இடங்களில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆங்காங்கே தடுப்புகள் போடப்படும் என்று அறியப்படுகிறது. அண்மையில் தென்கொரியத் தலைநகர் சோலில் நடைபெற்ற ஹெலோவின் திருவிழாவின்போது கூட்ட நேரிசல் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

அத்தகைய ஒரு சோக நிகழ்வு சிங்கப்பூரில் நிகழக்கூடாது என்பதில் உள்ளூர் அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர். பாதுகாப்பு தொடர்பாக மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பதை சோலில் நிகழ்ந்த துயரச் சம்பவம் நினைவூட்டுகிறது என்று சிங்கப்பூர் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இம்முறை மரினா பே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான பாதுகாப்புப் பணிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று காவல்துறை கூறியது.

தண்ணீரில் நனைந்தாலும் பழுதடையாத ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவற்றை இயக்குவர் என்றும் மழை பெய்தாலும் பாதிப்பு ஏதும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் 'மோபிகேம்' எனுப்படும் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அவற்றின் மூலம் அறிவிப்பு, படங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிகாரிகளால் தகவல் தெரிவிக்க முடியும்.