கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட் பகுதியிலுள்ள கெப்பல் கிளப் அமைந்துள்ள இடத்தில் கிட்டத்தட்ட 6,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் அங்கு முதலாவது 'பிடிஓ' திட்ட வீடுகள் விற்பனைக்கு வரும்.
அந்த 48 ஹெக்டர் இடத்தில் கட்டப்படவிருக்கும் 9,000 வீடுகளின் ஒரு பகுதியாக இவை அமையும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்தார். அவ்வீடுகள் இயற்கைக்கு நெருக்கமான, தனித்துவமான நீர்முகப்பு வாழ்க்கையை வழங்கும்.
எஞ்சிய 3,000 வீடுகள் தனியார் வீடுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது, தனியார் வீடமைப்புத் திட்டங்கள் அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
பிடாடாரி பேட்டையில் கிட்டத்தட்ட பாதி அளவுள்ள அந்த 48 ஹெக்டர் இடமானது, முதிர்ச்சி அடைந்த பேட்டையான புக்கிட் மேராவின்கீழ் வருகிறது. தெலுக் பிளாங்கா சாலை, பெர்லேயர் கிரீக், புக்கிட் செர்மின் ஆகியவற்றால் அது சூழப்பட்டுள்ளது.


