நாடு திரும்பிய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு

நாடு திரும்பிய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு

2 mins read
56603ddc-b87e-420b-99c3-c910fc67795a
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் நேற்று அதிகாலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்புக் குழுவின் தளபதி கர்னல் சியூ கெங் டோக்கை (நடுவில்) வரவேற்கும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்குச் சென்று, மீட்புப் பணிகளில் கைகொடுத்தபின் நேற்று நாடு திரும்பிய 68 பேர் கொண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு சாங்கி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

'ஆபரேஷன் லயன்ஹார்ட்' என்ற அந்தப் பத்து நாள் இயக்கத்தின் முதற்கட்டமாக 20 அதிகாரிகள் கொண்ட குழு, கடந்த 8ஆம் தேதி தென்துருக்கிய நகரமான காராமன்மராசைச் சென்றடைந்தது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, 48 அதிகாரிகளும் நான்கு நாய்களும் கூடுதல் மருந்துப் பொருள்களுடனும் கருவிகளுடனும் அந்நகரை அடைந்தனர்.

இந்தப் பத்து நாள்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனை சிங்கப்பூர் குழு மீட்டது. மேலும் பல பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து உடல்களை மீட்க அக்குழு கைகொடுத்தது; துருக்கிய மீட்புக் குழுக்களுக்குப் பொருள்களை வழங்கியது.

இந்நிலையில், நேற்று அதிகாலை சிங்கப்பூர் திரும்பிய அக்குழுவினரை வரவேற்க அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 400க்கும் மேற்பட்டோர், பதாகைகளுடனும் பூங்கொத்துகளுடனும் சாங்கி விமான நிலையத்தில் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அத்துடன், சிங்கப்பூரில் வசிக்கும் துருக்கியர்கள் கிட்டத்தட்ட 50 பேரும் இருநாட்டுக் கொடிகளை ஏந்தியவாறும் மலர்களுடனும் அங்கு திரண்டிருந்தனர்.

சிங்கப்பூர் குழுவினரை வரவேற்க வந்திருந்த சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், "மிகுந்த சிரமமான சூழ்நிலைகளிலும் கடமை உணர்வுடன் சிங்கப்பூர் குழுவினர் ஆற்றிய பங்களிப்புகளை எண்ணி நானும் எல்லா சிங்கப்பூரர்களும் பெருமிதம் கொள்கிறோம்," என்றார்.

துருக்கியில் இப்போது நிலவும் குளிரான காலநிலை பெரும் சவாலாக இருந்தபோதும் அதற்கு தாங்கள் பழகிக்கொண்டு, அத்தகைய சூழலில் எவ்வாறு செயல்படுவது எனக் கற்றுக்கொண்டோம் என்று சிங்கப்பூர் மீட்புக் குழுவின் தளபதி கர்னல் சியூ கெங் டோக் கூறினார்.