கலிஃபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; எழுவர் மரணம்

கலிஃபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; எழுவர் மரணம்

2 mins read
7db46e37-c780-4715-8089-89a6d5097426
ஆயுதமேந்திய அதிகாரிகள், ஆசிய ஆடவரை மடக்கிப் பிடிப்பதைக் காணொளி ஒன்று காட்டியது. படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், சான் மேட்டியோ கவுன்டியில் உள்ள இரு பண்ணைகளில் சிறுவர்கள் முன்னால் ஏழு ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிய பண்ணை ஊழியர் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு தெற்கே உள்ள சான் மேட்டியோ கவுன்டியில் அந்தப் பண்ணைகளுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 23) அவசர உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு சிலர் மாண்டு கிடந்ததையும் பலர் காயமுற்று இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் சுன்லி ஸாவ் எனும் 67 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அரசாங்க அதிகாரி கிறிஸ்டினா கோர்பஸ் தெரிவித்தார்.

"துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்து தகவலறிந்த அதிகாரிகள், இன்று பிற்பகல் 2.22 மணிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காரணமாக நால்வர் மாண்டு கிடந்ததை கண்டறிந்தனர்.

"ஐந்தாமவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்ஃபர்ட் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

"துப்பாக்கிச்சூடு நடந்த வேறோர் இடத்தில், மேலும் மூவர் மாண்டு கிடந்தது கண்டறியப்பட்டது," என்றார் திருவாட்டி கோர்பஸ்.

பின்னர், காவல் நிலையம் ஒன்றுக்கு ஸாவ் வாகனத்தை ஓட்டிச்சென்றதாக திருவாட்டி கோர்பஸ் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்புக்காக 'ஏபிசி7' செய்திக்குழுவினர் அப்போது அங்கு காத்திருந்தனர்.

ஆயுதமேந்திய அதிகாரிகள், ஆசிய ஆடவர் ஒருவரை மடக்கிப் பிடிப்பதைக் காணொளி ஒன்று காட்டியது.

"தடுப்புக்காவலில் சாவ் வைக்கப்பட்டுள்ளார். அவரது வாகனத்தில் பகுதி தானியக்க கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது," என்றார் திருவாட்டி கோர்பஸ்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று சொன்ன அவர், குடும்பங்கள் சுற்றியிருந்த கிராமப்புறப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகக் கூறினார்.

"பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சிறுவர்கள் இந்தத் துப்பாக்கிச்சூட்டைப் பார்த்திருப்பது பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை," என்றார் திருவாட்டி கோர்பஸ்.

துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியானவர்கள் சீனப் பண்ணை ஊழியர்கள் என்று ஹாஃப் மூன் பே நகர மன்ற ஊழியர் ஒருவர் கூறியதை 'என்பிசி பே ஏரியா' ஊடகம் மேற்கோள்காட்டியது.

இரு பண்ணைகளும் ஹாஃப் மூன் பே புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளன.

லாஸ் ஏஞ்சலிஸ் அருகே உள்ள நடனக்கூடத்தில் 11 பேரின் உயிரைப் பறித்த துப்பாக்கிச்சூடு நடந்த 48 மணி நேரத்திற்குள் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.