7 அமைச்சுகளுக்கு புதிய தலைமை

7 அமைச்சுகளுக்கு புதிய தலைமை

3 mins read
337c9396-0dbb-4670-ac40-99757aa0022c
புதிய அமைச்சரவை மாற்றங்களை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று (ஏப்ரல் 23ஆம் தேதி) அறிவித்தார் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் அமைச்சரவையில் நேற்று பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் விவரங்களை பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். அமைச்சரவை மாற்றங்கள் மே 15 முதல் நடப்புக்கு வரும்.

புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக லாரன்ஸ் வோங், 48, இருப்பார். அவர் வகித்து வந்த கல்வி அமைச்சை வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், 51, ஏற்பார். அவர் கைவிடும் வர்த்தக தொழில் அமைச்சு சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வசம் செல்லும்.

போக்குவரத்து அமைச்சராக இருக்கும் ஓங் யி காங், 51, புதிய சுகாதார அமைச்சராகப் பதவி ஏற்பார். அத்துடன், கொவிட்-19 அமைச்சுகள் நிலை குழுவிற்கு லாரன்ஸ் வோங்குடன் சேர்ந்து இணைத் தலைமையை ஓங் யி காங் ஏற்பார்.

புதிய மாற்றங்களின்படி 15 அமைச்சுகளில் ஏழு அமைச்சுகளுக்கு புதிய தலைமை அமையும். தொடர்பு தகவல் அமைச்சராக இருக்கும் எஸ் ஈஸ்வரன், 58, போக்குவரத்து அமைச்சர் ஆகிறார்.

அவர் கைவிடும் தொடர்பு தகவல் அமைச்சை தற்போது மனிதவள அமைச்சராக இருக்கும் ஜோசஃபின் டியோ, 52, ஏற்பார்.

மனிதவள அமைச்சு, இப்போது அந்த அமைச்சில் இரண்டாம் அமைச்சராக இருக்கும் டான் சீ லெங், 56, வசம் செல்லும். வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து வகிப்பார். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் பொறுப்பேற்றது. இந்த விரிவான அமைச்சரவை மாற்றம் புதிய அரசாங்கத்தின் பதவி காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே செய்யப்படுவதற்கான காரணங்களை பிரதமர் லீ சியன் லூங் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

முதலாவது, துணைப் பிரதமராக இருக்கும் ஹெங் சுவீ கியட் தம்வசம் உள்ள நிதி அமைச்சைக் கைவிடுவதால் ஏற்படும் விளைவுகள்.

இரண்டாவது, கொவிட்-19 விவகாரத்தைக் கையாளும் சுகாதாரம், மனிதவளம், வர்த்தக தொழில் ஆகிய முன்னணி அமைச்சுகளுக்குத் தலைமை ஏற்போரிடம் செய்யப்பட வேண்டிய மாற்றம்.

பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த வேளையிலேயே இந்த மாற்றங்களைச் செய்வது பற்றி தாம் பரிசீலித்ததாகவும் ஆனால் அந்த சமயத்தில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நாடு கடுமையான ஈடுபட்டு இருந்தது என்றும் குறிப்பிட்ட திரு லீ, தற்போது கொவிட்-19 நிலவரம் சற்று சீரடைந்து வருவதால் அதனைச் செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே பல்வேறு அமைச்சு பொறுப்புகள் மூலம் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ள நான்காம் தலைமுறை அமைச்சர்கள் புதிய அனுபவங்களைப் பெற்று அதற்கிணங்க செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளாக பிரதமர் கூறினார்.

இந்த அமைச்சரவை மாற்றம் பெரிதுதான் என்றபோதிலும் திடீரென்று மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.

"தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் நான் செய்த அமைச்சரவை மாற்றங்கள் ஓர் இடைக்கால மாற்றமாகவே இடம்பெற்றன. தற்போதுதான் முழுமையான மாற்றங் களை நான் செய்துள்ளேன்," என்றார் திரு லீ. குறுகிய காலத்தில் இரு அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றவேண்டி இருந்தது என்று குறிப்பிட்ட அவர், கல்வி அமைச்சுக்கு லாரன்ஸ் வோங்கையும் போக்குவரத்து அமைச்சுக்கு ஓங் யி காங்கையும் மாற்றியதைக் குறிப்பிட்டார்.

"இப்போது சீரமைக்கப்பட்டு உள்ளதன் மூலம் புதிய அமைச்சர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளில் கூடுதல் காலம் நிலைத்திருப்பர்," என்றார் பிரதமர்.

நிதி அமைச்சைக் கைவிடுவதன் மூலம் வருங்கால பொருளியல் மன்றத்திற்குத் தலைமை ஏற்பது உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்க பொருளியல் நடவடிக்கைகளில் திரு ஹெங் சுவீ கியட் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

துணைப் பிரதமர் பொறுப்பைத் தொடரும் திரு ஹெங், பொருளியல் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக வும் தொடர்ந்து இருப்பார். பிரதமர் அலுவலகத்தில் இயங்கும் உத்திபூர்வக் குழுவையும் தேசிய ஆராய்ச்சி சம்மேளனத் தையும் அவர் கண்காணிப்பார்.

நிதி அமைச்சுக்கு லாரன்ஸ் வோங் நியமிக்கப்பட்டது குறித்தும் திரு லீ விளக்கினார்.

2016ஆம் ஆண்டு முதல் இரண்டாம் நிதி அமைச்சராக இருந்த திரு வோங் அந்த அமைச்சுக்கு இயல்பாகப் பொருந்தி இருப்பதாக அவர் சொன்னார். திரு சான் சுன் சிங் பற்றி குறிப்பிடும்போது பொருளியல் மீட்பில் அவர் உன்னத பணியாற்றியதாக பிரதமர் கூறினார்.