92,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன

வேலைகள், மாணவர் பயிற்சிகள், வேலைப் பயிற்சிகள் ஆகியவற்றுக்காக ஜூலை மாத இறுதி வரையில் கிட்டத்தட்ட 92,000 இடங்கள், வேலைத் தேடுவோருக்கென உருவாக்கித் தரப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்குப் பத்தில் ஏழு இடங்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஒவ்வொரு வாரமும் புதிதாக வெளியிடப்படும் வேலைவாய்ப்பு அறிக்கை தொடர்பில் அமைச்சர் டியோ, இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் பாதி எண்ணிக்கை, அரசாங்க நிதிச் சார்ந்ததாகவும் அதிகளவு மானியத்தில் வேலைப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அமைந்துள்ளன. அல்லது வேலைக்காக ஆள் எடுக்கும் திட்டத்தைத் தொடங்கிய பொதுத் துறை அமைப்புகளால் உருவாக்கப்பட்டதாக இருந்துள்ளன.

தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 42,000 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நீண்டகாலப் வேலைகளுக்குரியவை.

வேலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்லது வேலைப் பயிற்சிகளைப் பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 24,000 பேருக்கு வேலைகள் அமைந்தன. பத்தில் அறுவருக்கு குறுகிய கால வேலைகள் தரப்பட்டன.

கொவிட்-19 தொடர்பில் அதிகரித்த செயல்பாடுகளின் காரணத்தால் வேலைத் தேடுவோருக்குக் குறுகிய கால வேலையைத் தருவதே தொடக்ககால இலக்காக இருந்தது.

அதைத் தொடர்ந்து, வேலைப் பயிற்சித் திட்டங்களை அமல்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் அதிகரித்து வருகிறது.

இதன் தொடர்பான மேல் விவரங்கள், வேலை நிலவரம் குறித்து அடுத்தடுத்து வெளியிடப்படும் அறிக்கைகளில் கூறப்படும் என்றது மனிதவள அமைச்சு.

வேலைக்கு நியமிக்கப்பட்ட 24,000 பேரில், 40 விழுக்காட்டினர் பிஎம்இடி வேலைகளில் சேர்ந்திருந்தனர்.

வேலைச் சந்தை மந்தமடைந்திருந்தாலும் ஆங்காங்கே வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன என்றார் திருவாட்டி டியோ. இவ்வாறு உருவாக்கித் தரப்பட்டுள்ள அனைத்து வேலை வாய்ப்பு களையும் கருத்தில் கொள்ளுமாறு வேலைத் தேடுவோருக்கு அவர் அறிவுறுத்தினார்.

வேலை ஆதரவுத் திட்டத்தை விரிவுபடுத்தி நிறுவனங்களுக்கும் ஊழியர் சந்தைக்கும் ஆதரவளிக்கும் திட்டங்கள் தொடர்ந்து இருக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

தொடர்ந்து இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய பரந்துபட்ட ஆதரவு அவசியமா என்பதை அரசாங்கம் மும்முரமாக ஆராய்ந்து வருவதாக அமைச்சர் டியோ பதில் அளித்தார்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் இதன் தொடர்பில் கூடிய விரைவில் பேசுவார் என்றும் திருவாட்டி டியோ கூறினார்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon