ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையைவிட்டு வெளியேற்றப்படலாம்

ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையைவிட்டு வெளியேற்றப்படலாம்

1 mins read
4d02331e-28db-469f-a04c-637a07500678
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வசைமொழியை அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்வது அதிகமாகி வருகிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அவசர மருத்துவப் பராமரிப்பு தேவைப்படாத நோயாளிகள் , சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை வசைபாடினால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம். அதுபோல, பராமரிப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் எவரும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கும் மருத்துவ நிலைய வளாகங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வசைமொழியை அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்வது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தாதியர், மருந்தாளுநர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த பிற ஊழியர்களில் மூவரில் ஒருவர் வாரத்திற்குக் குறைந்தது ஒருமுறையேனும் இப்படி வசைமொழியை அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு எதிரான வசைமொழி, துன்புறுத்தல் தடுப்பு முத்தரப்புப் பணிக்குழு இப்பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளது.

எச்சரிப்பது, நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்க மறுப்பது போன்ற மற்ற தெரிவுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு, சுகாதாரப் பராமரிப்பு சேவைப் பணியாளர்கள் தொழிற்சங்கம், பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள், சமூகப் பராமரிப்புப் பங்காளிகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்கள் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அப்பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு எதிராக 2018ஆம் ஆண்டில் 1,080, 2019ஆம் ஆண்டில் 1,200, 2020ஆம் ஆண்டில் 1,300 வசைமொழி, துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் 2021ஆம் ஆண்டில் நவம்பர் வரை அத்தகைய 1,400 சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் கடந்த ஜனவரி மாதம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.