சாதனை அளவாக 500 விமானங்களை வாங்கியது ஏர் இந்தியா

2 mins read
48f86090-cbb8-4b60-8d7f-b358979d69ae
புதிய உரிமையாளர்களின் நிர்வாகத்தின்கீழ் உயிர்த்தெழுந்து, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்புடன் ஏர் இந்தியா உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

உலகளாவிய நிலையில் தனது தரத்தை உயர்த்தும் இலக்குடன் ஏறத்தாழ 500 விமானங்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது. இதுதொடர்பாக ஏர்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்களுடன் அது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 ஏர்பஸ் விமானங்கள், 190 போயிங் விமானங்களை வாங்க ஏர் இந்தியா இணங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏர்பஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

போயிங் நிறுவனத்துக்கும் ஏர் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த மாதம் 27ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

ஏர் இந்தியா வாங்கியுள்ள புதிய விமானங்களின் விலை 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$133 பில்லியன்) அதிகம்.

ஒரே நேரத்தில் இத்தனை விமானங்களை இதற்த முன்பு வேறு எந்த விமான நிறுவனமும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவின் புதிய உரிமையாளரான டாடா குழுமும் வாடிக்கையாளர்களை ஈர்த்து விமானப் போக்குவரத்துத் துறையில் கோலோச்சும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

இதற்காகவே புதிய விமானங்களை அது வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்லாது, தனது சேவைத் தரத்தையும் அது மேம்படுத்தி வருகிறது.

வெளிநாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான இந்திய வம்சாவளியினர் ஆண்டுதோறும் புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற இந்திய நகரங்களுக்குப் பயணம் செய்கின்றனர்.

இவர்கள் ஏர் இந்தியாவில் பயணம் செய்தால் அது பெருமளவிலான லாபத்தை ஈட்டித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, அவர்களை மீண்டும் தன்வசப்படுத்தும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.

தற்போது இந்தப் பயணப் பாதைகளில் அரபு நாடுகளின் விமான நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ், எத்திஹாட் போன்ற அரபு விமான நிறுவனங்கள் புதிய விமானங்களை வைத்திருக்கின்றன. உயர்தரச் சேவைகளை அவை வழங்குவதால் இந்தியப் பயணிகளிடையே அவை பிரபலமாக உள்ளன.

இவற்றுடன் போட்டியிட வேண்டுமாயின் தனது விமானங்களையும் சேவைத் தரத்தையும் அதிக அளவில் உயர்த்த வேண்டும் என்பதில் ஏர் இந்தியா தெளிவாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாது, ஆசிய நாடுகளிலும் உள்நாட்டுப் பயணங்களிலும் ஏர் இந்தியா மீண்டும் பிரபலமடைந்து ஆதிக்கம் செலுத்த அது வாங்கிய புதிய விமானங்கள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு விமானப் போக்குவரத்து சந்தைகளிலும் ஏர் இந்தியாவுக்கு இண்டிகோ விமான நிறுவனம் கடும் போட்டியைத் தந்து வருகிறது.

சொகுசான, உயர்தர விமானச் சேவைகளுக்கு முன்பு ஒரு காலத்தில் பேர்போன ஏர் இந்தியாவுக்கு 2000களின் நடுப்பகுதியில் நிதிப் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பயணிகள் மத்தியில் அதற்கு இருந்த நற்பெயர் பாதிக்கப்பட்டது.

தற்போது புதிய உரிமையாளர்களின் நிர்வாகத்தின்கீழ் உயிர்த்தெழுந்து, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்புடன் அது உள்ளது.