தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் ஆகப்பெரிய பணக்கார முதலமைச்சர் இவரே

2 mins read
313aa650-780e-474e-9d6f-381d193841da
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியுடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி. படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் ஆகப்பெரிய பணக்கார முதலமைச்சராக ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். அவரது சொத்தின் மதிப்பு ரூ.510 கோடி எனக் கூறப்படுகிறது.

ரூ.1 கோடிக்கும் குறைவான சொத்துகள் உடைய ஒரேயொருவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனவும் சொல்லப்படுகிறது.

அரசியல், தேர்தல் சீர்திருத்தங்களுக்காக செயல்படும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உடைய திருவாட்டி பானர்ஜி, பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்.

பட்டியலில் அவருக்கு மேலே கேரள முதல்வர் பினராயி விஜயனும் (ரூ.1.2 கோடி) ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும் (ரூ.1.3 கோடி) உள்ளனர்.

இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்குத் தலைமை தாங்கும் 30 முதல்வர்களில், 29 பேரின் சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்குமேல் உள்ளது.

முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.34 கோடியாக உள்ளது.

திரு ஜெகனுக்கு அடுத்ததாக, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.163 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (ரூ.63 கோடி) உள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கையில், திரு ஜெகனின் சொத்து மதிப்பு ரூ.373 கோடியாக இருந்தது. வாரிசாக அவருக்குக் கிடைத்த சொத்துகளும் அவர் வாங்கிய சொத்துகளும் இதில் அடங்கின.

இதற்கிடையே, அதிக குற்ற வழக்குகளையும் நிதிச்சுமையையும் கொண்டுள்ள முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு எதிராக 64 குற்ற வழக்குகள் உள்ளன.

அவருக்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 47 குற்ற வழக்குகள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மூன்றாவது இடத்தில் உள்ள திரு ஜெகனுக்கு எதிராக 38 குற்ற வழக்குகள் உள்ளன.