பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்

பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்

fallback-0

12 Jan 2023 - 8:19 pm

2 mins read

குறைந்த, நடுத்தர வருவாய்க் குடும்பங்களுக்கு பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வைச் சமாளிக்க உதவும் வகையில் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

தகுதிபெறும் குடும்பங்கள் இம்மாதம் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிபெறுவோர், https://www.go.gov.sg/ptv என்ற இணையத்தள முகவரியிலோ அவரவர் வசிக்கும் வட்டாரத்தின் சமூக மன்றங்களிலோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் வியாழக்கிழமை (ஜனவரி 12) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே முதல்கட்டமாக விநியோகிக்கப்பட்ட இப்பற்றுச்சீட்டுகளைப் பெற்றவர்கள் மறுமுறை விண்ணப்பிக்கக்கூடாது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதுகுறித்து அஞ்சல்வழி தெரிவிக்கப்படும்.

சென்ற மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் 2.9 விழுக்காடு உயர்ந்துள்ளன.

அதைச் சமாளிக்க உதவும் நோக்கில் $30 மதிப்புள்ள மொத்தம் 600,000 பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

முதல்கட்டமாக, இப்பற்றுச்சீட்டுகளில் ஒரு பகுதி, ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டவர்களாகவும் தொடர்ந்து பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெற்றவர்களாகவும் இருப்போருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விநியோகம் சென்ற மாதம் முடிவுற்றது. அதில் மொத்தம் 240,000 இல்லங்களுக்கு பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில் காணப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி டிரான்சிட்லிங்க் முகப்புகளிலோ டிரான்சிட்லிங்க் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகங்களிலோ சலுகைக் கட்டண அட்டை வழங்கும் அலுவலகங்களிலோ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்துப் பற்றுச்சீட்டுகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதுமிருந்தால், குடியிருப்பாளர்கள் அவரவர் பகுதியில் உள்ள சமூக மன்றங்களை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.