ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுவானதாக இருக்கிறது என்றாலும் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பால் இன்னும் ஏராளமான பலன்களை அடையமுடியும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பை உருமாற்றி புதிய, வளர்ந்துவரும் துறைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறிய பிரதமர், வர்த்தகம், மின்னிலக்கம், இணையப் பாதுகாப்பு, பசுமைப் பொருளியல் ஆகிய நான்கு துறைகளைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், நெருக்கமான உறவால் அனைத்து மக்களுக்கும் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் வழங்கமுடியும் என்று அவர் நம்பிக்கை அளித்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (அக்டோபர் 10), இதர பங்காளித்துவ நாடுகளுடனான மாநாடுகள் நடைபெற்றன. அதில் 21வது ஆசியான் - இந்தியா உச்சநிலை மாநாடு நடைபெற்றது. ஆசியான் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஆசியான் - இந்தியா பொருளியல் வர்த்தக உடன்பாடு தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் 2025ஆம் ஆண்டு நடப்புக்கு வரும்போது வர்த்தகங்களுக்குப் பலன் தரும் வகையில் அது அமையும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியானின் ‘நெக்சஸ்’ திட்டத்தில் இந்திய மத்திய வங்கி இணைந்துள்ளது இரு வட்டாரங்களுக்கு இடையிலான எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைக்கு வசதி செய்துதரும் என்றார் திரு வோங்.
ஆசியான் வட்டாரத்தின் பசுமை உருமாற்றத்திற்கு இந்தியாவின் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத் தீர்வுகளில் உள்ள நிபுணத்துவம் அத்தியாவசியமான ஆதரவாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து ஆசியான் ‘பவர் கிரிட்’ எனும் எரிசக்தி கட்டமைப்புக்கான புதுப்பிக்கத்தக்க கட்டமைப்புகளையும் தீர்வுகளையும் இந்திய நிறுவனங்கள் அமைக்குமாறு அழைப்பு விடுத்தார் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் - இந்தியா ஒருங்கிணைப்பாளராக 2021முதல் 2024ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகளுக்கு சிங்கப்பூர் பொறுப்பேற்றது. அண்மையில் ஒருங்கிணைப்புப் பொறுப்பை பிலிப்பீன்சிடம் அது ஒப்படைத்தது. தற்போது ஆசியான் - ஜப்பான் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூர் உள்ளது.
ஆசியான் நாடுகளின் தலைவர்கள் இதர பங்காளிகளுடன் ஏழு சந்திப்புகளை அக்டோபர் 10ஆம் தேதி நடத்தினர்.
சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தனித்தனியே கூட்டங்கள், அவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஆசியான் ‘பிளஸ் 3’ கூட்டம், கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் கூட்டங்கள் என மொத்தம் ஏழு கூட்டங்களிலும் கலந்துகொண்டு பிரதமர் வோங் உரையாற்றினார்.