தோ பாயோ, பொத்தோங் பாசிருக்கு அருகே அமைந்துள்ள பிடாடாரி குடியிருப்புப் பேட்டையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 10,000 வீடுகள் அமைந்திருக்கும்.
அந்தப் பேட்டையில் குடி இருப்போர், பார்ட்லி ரோட்டுக்கும் சிராங்கூன் அவென்யூ 1க்கும் நேரடியாகச் செல்வதற்கான வழியைப் பெற மேலும் அதிக காலம் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று தெரிகிறது.
பிடாடாரி பார்க் டிரைவ்-1 என்ற 1.6கி.மீ. நீளமான, இரு தட இருவழிப் பாதைதான் பிடாடாரி பேட்டையின் மிக முக்கியமான போக்குவரத்து வழியாக இருக்கும் என்று கழகம் அறிவித்துள்ளது.
அந்தப் பாதையை பார்ட்லி ரோடு, சிராங்கூன் அவென்யூ 1 ஆகிய இரண்டு சாலைகளோடும் 2022 நான்காவது காலாண்டில் இணைக்க திட்டமிடப்பபட்டது. ஆனால், கொவிட்-19 காரணமாக பணிகள் தாமதமடைந்தன.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அந்த வேலை முடிய இருந்தது. ஆனால் இப்போது அது மேலும் தாமதமடையும் என்று தெரியவந்துள்ளது.
பிடாடாரி பார்க் டிரைவும் பார்ட்லி ரோடும் வேறு வேறு உயரத்தில் இருக்கின்றன.
இரண்டுக்கும் இடையில் 1 மீட்டர் உயர இடைவெளி உள்ளது. பிடாடாரி பார்க் டிரைவ் உயரமாக இருக்கிறது. ஓர் இடத்தில் அந்த உயரம் சுமார் 1.2 மீட்டராக உள்ளது. இதனால் பார்ட்லி ரோட்டை கட்டம் கட்டமாக உயர்த்த வேண்டியிருக்கிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு கழகம் விளக்கம் அளித்தது.
வேலைகளை இந்த ஆண்டின் முதல் பாதியில் முடித்துவிடலாம் என்றுதான் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த இடத்தின் சிக்கலான அமைப்பு காரணமாக கட்டுமானப் பணிகளுக்கு மேலும் கால அவகாசம் ஆகும் போல் தெரிகிறது என்று கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பணிகள் எப்போது முடியும் என்பதைத் தெரிவிக்க கழகத்தால் இயலவில்லை. திரவ தார் போன்ற சாலை கட்டுமானப் பொருள்களைக் கொண்டு அடுக்கடுக்காக பார்ட்லி ரோட்டை உயர்த்த வேண்டும்.
அந்த அடுக்குகள் எல்லாம் இறுக வேண்டும். இப்படி தேவையான அளவுக்கு அந்தச் சாலை மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் விவரித்தார்.
பிடாடாரி பார்க் டிரைவ் மட்டத்தை பார்ட்லி ரோடு மட்டத்திற்குத் தாழ்த்துவதும் சாத்தியமல்ல என்று பேச்சாளர் கூறினார்.
இதனிடையே, இதுபற்றி கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற போக்குவரத்து பொறியாளர் கோபிநாத் மேனன், "புதிதாகப் போடப்படும் பிடாடாரி பார்க் டிரைவ்வின் மட்டத்தைக் குறைத்தால் அதன் அருகே அமையும் வீடுகளின் உயரம் கூடிவிடும்.இதனால் சரிவான பகுதிகளை உருவாக்க வேண்டும். இதன் காரணமாக இடம் விரயமாகும்," என்று தெரிவித்தார்.
பிடாடாரி பார்க் டிரைவ், 57 ஹெக்டர் பரப்புள்ள பிடாடாரி குடியிருப்புப் பேட்டையை அப்பர் அல்ஜுனிட் ரோடு, அப்பர் சிராங்கூன் ரோடு ஆகியவற்றோடும் இணைக்கிறது.

