சுங்கை பூலோ சதுப்புநில இயற்கைவளப் பாதுகாப்புப் பாலத்தின் துவாரத்தில் தந்தையும் மகளும் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி செப்பனிடப்பட்டது. அப்பகுதியின் குளத்தின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்தவதற்கான மதகு வாயிலின் பாலம் அது.
கடந்த திங்கட்கிழமை தமது குடும்பத்தினருடன் அங்கு சென்றிருந்ததாக பக்கி ஹுசைன் என்னும் ஆடவர் தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டார்.
முற்பகல் 11 மணியளவில் கடுமையான மழை பெய்ததால் தமது குடும்பத்துடன் அந்த இடத்தைவிட்டுப் புறப்படத் தயாராகி பாலத்தைக் கடந்தபோது 3 முதல் 5 சென்டிமீட்டர் உயரத்திற்கு மழைநீர் ஓடிக்கொண்டு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்போது ஆஷ்லி எனப்படும் தமது 2 வயது மகள், பாலத்திலிருந்த பெரிய துவாரம் வழியாக விழுந்துவிட்டதாகவும் அழுக்கும் சேறும் நிறைந்த நீர் அவரைச் சூழ்ந்ததாகவும் திரு ஹுசைன் தமது பதிவில் குறிப்பிட்டார்.
உடனடியாக தமது மகளைத் தூக்க முயன்றபோது ஆழம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியாமல் தாமும் அந்தப் பாலத்தின் அடியில் இழுக்கப்பட்டதாகவும் அதனால் சில சிராய்ப்புக் காயங்கள் தமக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நான்கு வயது மகனுடன் இருந்த தமது மனைவி திகைப்புடன் இருந்தார் என்றும் அந்த இரு நிமிடங்கள் வாழ்வின் போராட்டம் என்றும் அவர் கூறினார்.
ஒருவழியாக எப்படியோ தப்பித்து மேலே வந்ததாகவும் இன்னும் சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் தாங்கள் இருவரும் மூழ்கி இருப்போம் என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விளக்கிய தேசிய பூங்காக் கழகத்தின் இயற்கைவளப் பாதுகாப்புக் குழும இயக்குநர் லிம் லியாங் ஜிம், கடுமையாகப் பெய்த மழையின் காரணமாக மதகு வாயில் பாலத்தின் பலகைகள் பெயர்ந்து துவாரம் ஏற்பட்டதாகவும் சம்பவம் நிகழ்ந்த அன்றே, மழைநீர் வடிந்ததும் பலகைகள் திருப்பி வைக்கப்பட்டு துவாரம் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லாப் பலகைகளும் சரியாக உள்ளனவா என்று கழக அதிகாரிகள் சோதித்ததாகவும் வழக்கமாக துவாரங்களை அடைக்கும் பணிகளின் ஒருபகுதி இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நடைபெற்ற பாலத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 26) இரு ஊழியர்கள் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டு இருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கண்டார்.

