புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களும் மிதிவண்டிப் பாதையைக் கொண்டிருக்கும் வகையில், நேற்று அங்கு 8.5 கிலோமீட்டர் நீள மிதிவண்டிப் பாதைகள் அறிமுகம் கண்டன.
இதனையடுத்து, அவ்வட்டாரம் ஏறத்தாழ 16 கி.மீ. நீளத்திற்கு மிதிவண்டிப் பாதைகளையும் பூங்கா இணைப்புப் பாதைகளையும் கொண்டிருக்கிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இதனால், புக்கிட் பாஞ்சாங் உணவங்காடி நிலையம், புக்கிட் பாஞ்சாங் பிளாசா, ஹிலியன் மால் போன்ற கடைத்தொகுதிகளுக்கும் மூன்று சமூக நிலையங்களுக்கும் அந்த வட்டாரவாசிகள் நடந்து அல்லது மிதிவண்டியில் செல்ல முடியும்.
அந்தப் பாதைகள் புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையத்தையும் அவ்வட்டாரத்தில் உள்ள எட்டு எல்ஆர்டி நிலையங்களையும் இணைக்கின்றன என்று ஆணையம் குறிப்பிட்டது.
அத்துடன், அங்குள்ள பூங்கா இணைப்புப் பாதைகளையும் பூங்காக்களையும் அப்புதிய பாதைகள் இணைக்கின்றன. இனி, செஞ்சாவில் வசிக்கும் ஒருவர் ஸெங்குவா இயற்கைப் பூங்காவிற்குப் பத்து நிமிடங்களுக்குள் மிதிவண்டியில் சென்று விடலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது.
பங்கிட் கோர்ட் பன்னோக்குக் கூடத்தில் நேற்றுக் காலை நடந்த புதிய மிதிவண்டிப் பாதை அறிமுக நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
"புதிய மிதிவண்டிப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் இவ்வட்டாரத்தில் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கும், அருகிலுள்ள சுவா சூ காங் வட்டாரத்திற்கும், வடக்கே கிராஞ்சியில் இருந்து தெற்கே தஞ்சோங் பகார்வரை செல்லும் ரயில் தடத்திற்கும் புக்கிட் தீமா கால்வாயை ஒட்டியபடி சிங்கப்பூர் பூமலைக்கும் சென்றுவர முடியும்," என்றார் டாக்டர் விவியன்.
பலவகைப் பயனாளர்கள் அப்பாதைகளைப் பகிர்ந்துகொள்வர் என்பதால் ஒவ்வொருவரும் கருணையுடனும் பாதுகாப்புடனும் செயல்படுவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டாக்டர் விவியனும் போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்கும் நேற்றுக் காலை 5.3 கி.மீ. தொலைவிற்கு மிதிவண்டி ஓட்டிச் சென்றனர்.
மிதிவண்டியோட்டிகளுக்குப் பயனளிக்கும் வகையில், பெண்டிங், சேகார், செஞ்சா ஆகிய எல்ஆர்டி நிலையங்களில் மிதிவண்டி நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


