சாங்கி: முந்தைய அளவில் பாதி அளவுக்கு பயணிகள்

சாங்கி: முந்தைய அளவில் பாதி அளவுக்கு பயணிகள்

2 mins read
7b2c7b6d-1a40-4032-b654-4c8adf366a02
சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) காணப்பட்ட பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலையம் வழியாக சென்ற ஆண்டில் மொத்தம் சுமார் 32.2 மில்லியன் பயணிகள் கடந்து சென்றனர். இந்த அளவு கொவிட்-19க்கு முன்பு 2019ல் சாங்கி வழியாகச் சென்ற பயணிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதியாகும்.

சாங்கி விமானநிலையத்தில் சென்ற ஆண்டில் மொத்தம் 219,000 விமானச் சேவைகள் இடம்பெற்றன. இந்த அளவு 2019ஆம் ஆண்டு அளவுடன் ஒப்பிடுகையில் 57.2% ஆகும்.

சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட ஆகப்புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம்தான் மிகவும் சுறுசுறுப்பான மாதமாக இருந்தது. சாங்கி விமான நிலையம் வழி டிசம்பரில் 4.62 மில்லியன் பயணிகள் சென்றார்கள். இது, 2019 டிசம்பர் அளவில் 72 விழுக்காட்டிற்குச் சமம்.

டிசம்பர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளை சாங்கி கையாண்டது. இந்த அளவு 2019ல் சராசரி வார பயணிகள் அளவில் 82% என்பது குறிப்பிடத்தக்கது.

சாங்கி விமான நிலையத்தில் டிசம்பரில் 25,400 விமானச் சேவைகள் இடம்பெற்றன.

ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனீசியா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள்தான் சிங்கப்பூருக்குச் சென்ற ஆண்டில் அதிகம் வந்தார்கள்.

தென்கிழக்கு ஆசியாவில் பயணிகள் போக்குவரத்து 2022ல் வலுவான மீட்சியைக் கண்டது.

கோலாலம்பூர், பேங்காக், ஜகார்த்தா ஆகியவை சாங்கி விமானநிலையத்தின் மூன்று ஆக சுறுசுறுப்புமிக்க விமான வழித்தடங்களாக இருந்தன.

சாங்கி விமான நிலையத்தின் மிக முக்கிய 10 பயணிகள் சந்தையைப் பார்க்கையில் தென் கொரியாவில் இருந்து கடந்த டிசம்பரில் இங்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19க்கு முந்தைய நிலையைத் தாண்டிவிட்டது.

இந்த ஆண்டின் முதல் வாரத்தில் சிங்கப்பூரை 48 நாடுகள், வட்டாரங்களில் உள்ள 143 நகர்களுடன் இணைக்கும் 5,600 விமானச் சேவைகள் இடம்பெற்றன. இது கொவிட்-19க்கு முந்தைய அளவில் 82% என்பது குறிப்பிடத்தக்கது.