சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதன்முறையாகக் குறைந்துள்ளது. இதனையடுத்து, உலகில் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் பிறப்பைக் காட்டிலும் இறப்பு அதிகமாகப் பதிவானது. சென்ற ஆண்டு அங்கு 9.56 மில்லியன் குழந்தைகள் பிறந்தனர்; 10.41 மில்லியன் பேர் மாண்டுபோயினர்.
அதாவது, பிறப்பைக் காட்டிலும் இறப்பு எண்ணிக்கை 850,000 அதிகமாக இருந்தது.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அங்கு குழந்தைப் பிறப்பு குறைந்து வருகிறது.
சீனாவில் 2022ஆம் ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் பிறப்பு விகிதம் இருந்தது. சீன வரலாற்றில் இதுவே ஆகக் குறைந்த பிறப்பு விகிதம். முந்திய 2021ல் இவ்விகிதம் 7.57ஆகப் பதிவானது.
மாறாக, 1976ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக அங்கு இறப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டு அங்கு 1,000 பேருக்கு 7.37 பேர் என்ற விகிதத்தில் அங்கு இறப்பு பதிவானது. முந்திய 2021ஆம் ஆண்டில் இவ்விகிதம் 7.17ஆக இருந்தது.
மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த சீன அரசு முன்னர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளே இப்போதைய நிலைமைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அங்கு 1985 முதல் 2015 வரை 'ஒரு குழந்தை' கொள்கை நடப்பில் இருந்தது. அத்துடன், கல்விச் செலவுகளும் விண்ணைமுட்டும் வகையில் இருந்ததால், பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தைக்குமேல் பெற்றுக்கொள்ளவில்லை; சிலர் குழந்தை பெற்றுக்கொள்வதையே தவிர்த்தனர்.
கடந்த மூவாண்டுகளாக 'கொவிட்-19 தொற்றை அறவே ஒழிப்பது' என்ற நோக்கத்துடன் சீனா செயல்பட்டதும் மக்கள்தொகையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பது மக்கள்தொகை வல்லுநர்களின் கருத்து.
இந்நிலையில், "இதுவரை கண்டிராத சீனாவை இனி உலகம் பார்க்கப் போகிறது," என்று கூறியிருக்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரும் சீன மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சியாளருமான டாக்டர் வாங் ஃபெங்.
"இனியும் சீன மக்கள்தொகை இளமையும் துடிப்பும் கொண்டதாக இராது; அதிக முதியவர்களைக் கொண்ட, சுருங்கும் மக்கள்தொகையாக இருக்கும்," என்றும் அவர் சொன்னார்.
வரும் 2035ஆம் ஆண்டுவாக்கில் சீனாவில் 400 மில்லியன் பேர் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அப்போது அங்கு மூவரில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்.
இதனிடையே, குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க வரிக்கழிவு, நீண்ட மகப்பேற்று விடுப்பு, வீடமைப்பு மானியங்கள் என, கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து சீனா பல சலுகைகளை அறிவித்து வந்தாலும், அதனால் உடனடியாக பலன் கிட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.

