ஜூரோங் வட்டார ரயில் பாதை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

ஜூரோங் வட்டார ரயில் பாதை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

2 mins read
76def569-a2e5-4080-8147-81bb9c6dd1ec
ஓவியரின் கைவண்ணத்தில் ஜூரோங் ரயில் பாதையின் பூன் லே நிலையம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -
multi-img1 of 2

மூன்றாண்டு காலத்திற்கும் மேலான ஆயத்தப் பணிகளுக்குப் பிறகு, ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (13-1-2023) தொடங்கின.

சிங்கப்பூரின் ஏழாவது பெருவிரைவு ரயில் பாதையான (எம்ஆர்டி) ஜூரோங் வட்டார ரயில் பாதையில் 24 நிலையங்கள் அமையும்.

மொத்தம் 24 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில், பயணிகள் மற்ற வழித்தடங்களுக்கு எளிதாக மாறும் வகையில், பூன்லே, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட் என மூன்று சந்திப்பு நிலையங்கள் இருக்கும்.

தொடக்க காலத்தில் இந்த ரயில் பாதை வழியாக நாளொன்றுக்கு 200,000 பேர்வரை பயணம் செய்வர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜூரோங் புத்தாக்க வட்டாரம், தெங்கா நகரம், ஜூரோங் லேக் வட்டாரம் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தபின், அந்த ரயில் பாதை வழியாக நாள்தோறும் பயணம் செய்வோர் எண்ணிக்கை 500,000க்கும் அதிகமாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மதிப்பிட்டு இருக்கிறது.

ஜூரோங் வட்டாரப் பாதையின்மூலம் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இணைப்புத்திறன் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ரயில் பாதைப் பணிகள் நிறைவுற்றபின் மேலும் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் பத்து நிமிட நடைக்குள் ஒரு ரயில் நிலையத்திற்குச் சென்றுவிடலாம்.

ஜூரோங் வட்டார ரயில் பாதைத் திட்டம் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. அப்போது, 2026 முதல் 2028க்குள் மூன்று கட்டங்களாக அது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவலால் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது ஓராண்டுக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.