கூரையின் மேலிருந்தபடி வேலை செய்துகொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாண்டு வேலையிடத்தில் நிகழ்ந்த ஆறாவது மரணம் இது.
மாண்டவர் பங்ளாதேஷைச் சேர்ந்த 33 வயது ஆடவர் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 2, மார்சிலிங் லேனில் இவ்விபத்து நிகழ்ந்தது என்றும் மனிதவள அமைச்சின் பேச்சாளர் இன்று (03-03-2023) தெரிவித்தார்.
நான்கு மீட்டர் உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்ததாகச் சொல்லப்பட்டது.
அவர் உடனடியாக கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனாலும், நான்காவது நாளில், அதாவது கடந்த புதன்கிழமை அவர் இறந்துவிட்டார்.
'குவான் டெக் கன்ஸ்ட்ரக்ஷன் 2000' என்ற நிறுவனத்திற்காக அவர் வேலைசெய்து வந்தார். இவ்விபத்தைத் தொடர்ந்து, பணிநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், அந்நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களுக்குப் புதிதாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும் அமைச்சு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.


