கொரோனா: குறுகிய கால பயணிகளுக்கு சிங்கப்பூர் தடை

கொரோனா: குறுகிய கால பயணிகளுக்கு சிங்கப்பூர் தடை

2 mins read
de6bd1c9-0ced-4516-b67e-5d5385a92d4c
சிங்கப்பூரின் விமான சேவைகள் உட்பட பல நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாங்கி விமான நிலையம் இப்போது ஆள் அரவம் இன்றி காணப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகலவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், வெளிநாட்டவருக்குத் தனது கதவுகளை மூடிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரும் இணைந்துள்ளது.

நாளை (மார்ச் 23) இரவு 11.59 முதல் குறுகிய கால பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையவோ சிங்கப்பூர் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லவோ (transit), தடை விதிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை போன்ற முக்கியமான சேவைகள் வழங்கும் துறைகளில் பணி புரியும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரும் அவர்களைச் சார்ந்திருக்கும் 'டிப்பெண்டன்ட்' பாஸ் வைத்திருப்போரும் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தத் தடை நாளை (திங்கட்கிழமை) இரவு 11.59க்கு நடப்புக்கு வரும் என்று சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் முதன் முறையாக கொரோனா கிருமித்தொற்றுக்கு இரண்டு பேர் நேற்று உயிர் இழந்ததைத் தொடர்ந்து இந்த புதிய எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னால் ஒரு சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது, அப்படி சிங்கப்பூருக்குள் வருபவர்களும் 14 கட்டாய வீட்டு விடுப்பில் இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் வேலை வேலை அனுமதி சீட்டுடன் பணி புரியும் மலேசியர்கள், முறையான தங்கும் வசதிகள் இருக்கும் பட்சத்தில் இந்த காலக்கட்டத்தில் தொடர்ந்து சிங்கப்பூரில் பணி புரியலாம் என சிங்கப்பூர்-மலேசிய சிறபு பணிக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 185 நாடுகளில் 260,000க்கும் மேற்பட்ட மக்கள் கொவிட்-19 எனும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 11,200 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது.