பெற்றோரை இழந்த குழந்தையைப் பேணி வளர்க்க போட்டா போட்டி

2 mins read
96900e5b-0a49-40b1-b44d-3e4deaeffbdc
அமெரிக்காவில் உயிரை மாய்த்துக்கொண்ட பிரவீன், தமிழ்ச்செல்வி இருவருடன் குழந்தை மிலன். படம்: இந்திய ஊடகம் -

தமிழ்நாட்டின் உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த பிரவீனும் அவர் மனைவி தமிழ்ச்செல்வியும் சென்ற ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி அமெரிக்காவில் உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்களுக்கு இரண்டு வயதில் விஸ்வத் மிலன் என்ற மகன் உள்ளான்.

சம்பவத்தையடுத்து பிரவீன், தமிழ்ச்செல்வி இருவரின் உடல்களை அவர்களின் உறவினர்கள் இந்தியாவிற்குக் கொண்டுவந்து இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.

குழந்தை மிலன் அமெரிக்காவில் பிறந்ததால் அவனுக்கு அமெரிக்கக் குடியுரிமை உண்டு. மிசிசிப்பி குழந்தைப் பாதுகாப்பு அமைப்பிடம் மிலன் ஒப்படைக்கப்பட்டான்.

இந்தியாவில் வசிக்கும் அவனது உறவினர்கள் மிலனை இந்தியா அழைத்துவர முற்பட்டனர். உரிய அனுமதி பெற்று குழந்தையை அழைத்துச் செல்லும்படி அமெரிக்க அதிகாரிகள் கூறிவிட்டனர்.

தமிழ்ச்செல்வியின் தங்கை தன் அக்கா மகனை இந்தியா அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றார். ஆனால் அங்கே சென்ற பிறகு, குழந்தை வடஇந்தியத் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

முன்னதாக பிரவீன் - தமிழ்ச்செல்வியின் குழந்தைக்காக 'கோஃபண்ட்மீ' எனும் அமைப்பு மூலம் ஏறக்குறைய 2.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. மேலும் மிலனைத் தத்தெடுக்க யாரும் முன்வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்தே வடஇந்தியத் தம்பதி நீதிமன்றத்தில் மிலனைத் தத்தெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். தற்காலிக அனுமதியும் அவர்களுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது.

தமிழ்ச்செல்வியின் தங்கை மிலனைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், தத்தெடுத்த தம்பதி இந்தியாவில் மிலனுக்குப் பாதுகாப்போ உரிய வசதிகளோ கிடைக்காது என்று வாதிட்டனர்.

அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்கீழ், தமிழ்நாட்டில் ஒரு சிறப்புக் குழு மிலனின் தாத்தா, பாட்டியின் கிராமத்திற்குச் சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பித்தது.

குழந்தைப் பாதுகாப்பு அமைப்பு அதற்கு ஒப்புதல் அளித்த பிறகும் வடஇந்தியத் தம்பதி குழந்தையைத் தர மறுக்கின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்கான வாரியத்தின் கவனத்துக்கு இதுகுறித்துத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் தமிழ் அமைப்புகள் குழந்தையை மீட்பதில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று மிலனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் மத்திய அரசு இதில் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.