சிங்கப்பூரில் இருந்து இந்தியா சென்ற தம்பதியர் இருவர், அந்நாட்டில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். அவர்கள் இருந்த காரின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர்கள் இறைதரிசனத்திற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றுகொண்டபோது விபத்தில் சிக்கி மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னைவரை விமானத்தில் சென்ற அவர்கள், பின்னர் அங்கிருந்து காரில் திருப்பதிக்குக் கிளம்பினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, எண்ணெய்க் கொள்கலன் லாரி ஒன்று அதன்மீது மோதியது.
இதில் காரில் சென்ற மூவரும் நிகழ்விடத்திலேயே மாண்டுபோனதாக 'ஏஎன்ஐ' செய்தி தெரிவித்தது. அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றது காவல்துறை. பின்னர் உள்ளூர்வாசிகளின் துணையுடன் காவல்துறையினர் காரிலிருந்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை எண்ணெய்க் கொள்கலன் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது. விபத்தில் சிக்கிய காரிலிருந்து உடல்களை மீட்கும் காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.