சிங்கப்பூரின் ஆக நீளமான நிலத்தடி எம்ஆர்டி பாதையான குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகள் புதன்கிழமை (ஜனவரி 18) தொடங்கின. சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி பாதையான இது, ஆக சவால்மிக்க ரயில் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பாதையின் முதற்கட்டம், 29 கிலோமீட்டர் நீளத்தில் 12 எம்ஆர்டி நிலையங்களைக் கொண்டிருக்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
பிரைட் ஹில், தெக் கீ, அங் மோ கியோ, டெவிஸ்டோக், சிராங்கூன் நார்த், ஹவ்காங், டெஃபு, தெம்பனிஸ் நார்த், பாசிர் ரிஸ், பாசிர் ரிஸ் ஈஸ்ட், லோயாங், ஏவியேஷன் பார்க் ஆகிய நிலையங்களை உள்ளடக்கிய குறுக்குத் தீவு ரயில் பாதையின் இக்குறிப்பிட்ட பகுதிக்கான பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும்.
சாங்கி, லோயாங் போன்ற வட்டாரங்களில் வசிப்போருக்கும் வேலை செய்வோருக்கும் வசதியாக இது அமையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் புதிய பிரைட் ஹில் எம்ஆர்டி நிலையம் அமையவுள்ள இடத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணி துவக்க விழாவில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்துகொண்டபோது பயண நேரம் பாதியாகக் குறைவது குறித்துப் பேசினார்.
சின் மிங் குடியிருப்பாளர் ஒருவர் பிரைட் ஹில் நிலையத்திலிருந்து பாசிர் ரிஸ் ஈஸ்ட் நிலையத்திற்குப் பயணிக்கும்போது 80 நிமிடங்களுக்குப் பதிலாக அரை மணி நேரத்தில் சென்றடையலாம் என்றார்.
சின் மிங் அவென்யூ நெடுகில் 2029ல் செயல்படவுள்ள புதிய 'போக்குவரத்து முன்னுரிமை மையம்' (டிபிசி), பிரைட் ஹில் நிலையத்துடன் இணைக்கப்படும்.
பேருந்துத் தடங்கள், மேலும் அகலமான நடைபாதைகள், மிதிவண்டிகளுக்கான பாதைகள் அல்லது பகிர்வுப் பாதைகள் ஆகியவை ஒருங்கிணைப்பட்ட வண்ணம் இந்த 2 கிலோமீட்டர் டிபிசி சாலை அமைந்திடும்.
இதன் மூலம் பேருந்துப் பயணம், மிதிவண்டிப் பயணம் அல்லது நடைப்பயணத்தைத் தேர்ந்தெடுத்து தாங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையும் வசதி, பயணிகளுக்கு கிடைக்கும்.
பயணிகளை புதிய எம்ஆர்டி நிலையத்துடன் இணைப்பதுடன் சின் மிங் வட்டாரவாசிகளை பீஷான்-அங் மோ கியோ பூங்காவுக்கு இணைக்கும் வகையிலும் டிபிசி அமைந்திடும்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். முழுமையாக முடிவடைந்த நிலையில் இப்பாதை 50 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுடையதாக விளங்கும்.
பாதை செயல்படத் தொடங்கும் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு நாளில் 600,000க்கும் மேற்பட்ட பயணிகள் இப்பாதையில் பயணம் செய்வர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் முன்னுரைத்துள்ளது.
இந்த எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது.
பாதையின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மண்ணின் தன்மை வேறுபடுவதால் பொறியியல் சவால்கள் உள்ளன என்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும் திரு ஈஸ்வரன் சுட்டினார்.
பொறியியல் புத்தாக்கத்தைத் தவிர குடியிருப்பாளர்கள், சாலைகள், தற்போது செயல்படும் ரயில் பாதைகள் ஆகியவைக்கு நேரக்கூடிய இடர்பாடுகளைக் குறைப்பதற்குத் துல்லியமான திட்டமிடல் இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆறு நிலையங்களைக் கொண்ட 15 கிலோமீட்டர் நீளமுடைய குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்டப் பணிகள் 2032ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைப்புமுறையை மேம்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சியில் ரயில் கட்டமைப்பின் விரிவாக்கம் ஒரு முக்கியத் திட்டமென திரு ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரிலேயே ஆக ஆழமான நிலையமாக பாசிர் ரிஸ் குறுக்குத் தீவு ரயில் பாதை நிலையம் அமைந்திடும். 47 மீட்டர் நிலத்தடி, அதாவது 16 மாடி உயரமுள்ள ஒரு வீவக கட்டடத்தின் அளவுக்கு அது இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறுக்குத் தீவு ரயில் பாதையில் அமையவுள்ள நிலையங்களில் பாதி, மற்ற ரயில் பாதைகளுடனான முனையங்களாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ரயில் கட்டமைப்பில் பயணம் செய்வதற்கு மக்களுக்கு மேலும் வசதியாக இருக்கும்.

