கணினி அமைப்பில் இடையூறு; சோதனைச்சாவடிகளில் தாமதமாகலாம்

1 mins read
40225cdc-a143-46bb-995f-46a6fbd8cc3b
கடற்பாலத்தில் குடிநுழைவு அனுமதிபெற நீண்டவரிசை காணப்பட்டது. இடையிடையே கணினிச் செயல்பாடு மெதுவடைந்துவிடுவதால் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. படங்கள்: MOHAMEDSHABIYUDEEN/FACEBOOK, CHLOE TAN/FACEBOOK -

குடிநுழைவு அனுமதிக்கான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறு ஏற்பட்டுள்ளதால் சில நிலவழி, வான்வழி சோதனைச்சாவடிகளில் பயணிகள் தாமதத்தை எதிர்பார்க்கலாம்.

கணினி அமைப்பில் ஏற்பட்ட இடையூறு குறித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 11.28 மணிக்கு ஃபேஸ்புக் வழியாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் அறிவித்தது.

நண்பகல் 12.03 மணிக்கு வெளியிட்ட பதிவில், பயணிகள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தள்ளிப்போடும்படி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரபூர்வமான அண்மைய தகவல்கள் ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உட்லண்ட்ஸ் அல்லது துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வர முயன்ற வாகனமோட்டிகள் சிலர், வெகுநேரம் காத்திருந்தபின் வரிசையைவிட்டு வெளியேறிவிட்டதாக இணையம் வழியாகப் பகிர்ந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கான ஒரு ஃபேஸ்புக் குழுவில், கடற்பாலத்தில் வாகனங்களும் குடிநுழைவுக்கூடத்தில் பயணிகளும் நீண்ட வரிசையில் நிற்கும் படங்களைப் பதிவிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகக் காத்திருப்பதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். தானியக்க முகப்புகளும் செயல்படவில்லை என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

அதேபோல, சாங்கி விமான நிலையத்திலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

கணினி அமைப்பு இடையூறு காரணமாக எல்லா முனையங்களிலும் புறப்பபாட்டு மற்றும் வருகைப் பயணிகளுக்கான தானியக்கக் குடிநுழைவு அனுமதித் தடச் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று சாங்கி விமான நிலையம் நண்பகல் 12.30 மணியளவில் ஃபேஸ்புக், டுவிட்டர் வழியாகத் தெரிவித்தது.