தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடைபாதைக்குள் புகுந்த வேன்; ஓட்டுநர் மரணம்

2 mins read
3dc39da9-5961-4dff-98c4-583450df0962
நடைபாதையின் மீது மோதிய வேனின் முன்பக்கம் மோசமாக சேதமுற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

ரெட்ஹில் எம்ஆர்டி நிலையம் அருகே கூரையுடன் கூடிய நடைபாதையை நோக்கி அதி வேகத்தில் வந்த வேன் ஒன்று தடுப்புகள் மீது பயங்கரமாக மோதி நின்றது.

அவ்வழியாக நடந்துசென்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரி டெங் ஹாவ் ஹின், மயிரிழையில் உயிர் தப்பினார்.

ஜாலான் டியோங்கிலிருந்து டியோங் பாரு ரோட்டை நோக்கி அதிவேகத்தில் வந்த வேனை கண்டதும் அவர் நடைபாதையிலிருந்து விலகி நின்றார்.

"சற்று எச்சரிக்கையாக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் என் உயிர் போயிருக்கும்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் 53 வயது டெங் தெரிவித்தார்.

வேனிலிருந்து புகை வந்ததாகவும் வழிப்போக்கர்களில் ஒருவர் அதை அணைத்ததாகவும் டெங் சொன்னார். வேன் ஓட்டுநர், முன்பக்கமாக சாய்ந்து இருந்ததாக டெங் கூறினார்.

திங்கட்கிழமை (மார்ச் 27) பிற்பகல் 3.20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, விபத்து நிகழ்ந்த எண் 920 தியோங் பாரு சாலை அருகே வந்துசேர்ந்தது.

முன் இருக்கையில் நசுங்கிய பகுதியில் சிக்கியிருந்த ஓட்டுநரை அதிகாரிகள் மீட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 72 வயது ஓட்டுநர் பின்னர் இறந்துவிட்டார்.

இருபது நிமிடங்களுக்கு மேலாக அவருக்கு இதயத் துடிப்பை மீட்கச் செய்யும் முதலுதவி சிகிச்சையை துணை மருத்துவர்கள் மேற்கொண்டதாக டெங் மேலும் கூறினார்.

விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியிருந்தது. ஒரு டயர் நடைபாதை மீது ஏறி மறுபக்கம் நீட்டிக்கொண்டிருந்தது. வேன் மோதியதில் தடுப்புகள், நடைபாதையின் கூரை மற்றும் தூண்களும் சேதமடைந்தன.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.