கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து பிரதமர் லீ: கிட்டத்தட்ட முன்பிருந்த நிலைக்கு சிங்கப்பூரைக் கொண்டுசெல்லும்

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து பிரதமர் லீ: கிட்டத்தட்ட முன்பிருந்த நிலைக்கு சிங்கப்பூரைக் கொண்டுசெல்லும்

2 mins read
23ef6758-f9f3-4171-a2a3-cb6768823dfa
கடந்த வாரயிறுதியில் பூமலையில் தாம் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடந்த ஆண்டு தாம் சந்தித்த அதே யோகா குழுவை இம்முறையும் சந்தித்ததாக பிரதமர் லீ குறிப்பிட்டார். படம்: லீ சியன் லூங்/ஃபேஸ்புக் -

பெரிய அளவிலான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு, கிட்டத்தட்ட முன்பிருந்த நிலைக்கு சிங்கப்பூரைக் கொண்டுசெல்லும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) முதல், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் லீ இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இந்த மாற்றங்கள், கிட்டத்தட்ட கொவிட்-19க்கு முன்பிருந்த நிலைக்கு நம்மை கொண்டுசெல்லும். உள்புறங்களில் முகக்கவசம் அணிவது, உடல்நலமில்லை என்றால் தனிமைப்படுத்திக்கொள்வது, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது என ஒவ்வொருவரும் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்வீர் என நாம் நம்புகிறேன்," என்று பிரதமர் லீ பதிவிட்டார்.

வரும் செவ்வாய்க்கிழமை முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, மக்கள் ஒன்றுகூடி உறவாடுவதற்கான அளவு வரம்பு இனி இருக்காது.

அதேபோல, வேலையிடங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கையில் வரம்பு இருக்காது.

ஈராண்டுகளில் முதன்முதலாக சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் (டோர்ஸ்கோன்), ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு இறங்கவிருக்கிறது.

2020 பிப்ரவரி 7ஆம் தேதி முதல், சிங்கப்பூரில் டோர்ஸ்கோன் எச்சரிக்கை நிலை ஆரஞ்சு நிலையில் இருந்து வந்துள்ளது.

அன்றாடத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து நிலவரம் சீராகியுள்ளதால், சமூக, பயண நடைமுறைகளை மேலும் தளர்த்த அரசாங்கத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.

கடந்த வாரயிறுதியில் பூமலையில் தாம் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடந்த ஆண்டு தாம் சந்தித்த அதே யோகா குழுவை இம்முறையும் சந்தித்ததாக பிரதமர் லீ தமது பதிவில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்குழுவினர் முகக்கவசம் அணிந்திருந்தனர். இம்முறை அதே குழுவினர் முகக்கவசம் அணியவில்லை. மார்ச் 29ஆம் தேதிமுதல், வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

"பெருந்தொற்றுச் சூழலிலும் உடற்பயிற்சில் ஈடுபடுவதை அவர்கள் விட்டுவிடாதது, என்னைக் கவர்ந்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வெளிப்புறத்தில் முகக்கவசமின்றி காற்றை சுவாசிப்பதில் ஒரு தனி ஆனந்தம்தான்," என்று பிரதமர் லீ பதிவிட்டார்.