வேலை அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களின் உயர்கல்விச் சான்றிதழ்களை இனி மூன்றாம் தரப்பினர் சரிபார்ப்பதற்கு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி இந்த நடைமுறை நடப்புக்கு வரும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
போலியான கல்விச் சான்றிதழைக் காட்டி வேலை அனுமதி அட்டை பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 'காம்பஸ்' எனப்படும் புதிய புள்ளிகள் அடிப்படையிலான துணை மதிப்பீட்டு முறை அமலுக்கு வருமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்முறையின்கீழ் விண்ணப்பதாரர் பெறும் புள்ளிகள் அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்.
எனவே ஒருவருக்கு வேலை அனுமதி அட்டை வழங்குவதற்கு, அவரது கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்த்தல் அவசியமாகிறது என்றார் அமைச்சர்.
இதுகுறித்து தொழிற்துறையினர், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் ஆகிய தரப்புகளைக் கலந்தாலோசித்த பிறகு அரசாங்கம் மேல்விவரங்களை வெளியிடும் என்று டாக்டர் டான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வேலை அனுமதி அட்டையைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் 'காம்பஸ்' துணை மதிப்பீட்டு முறையும் சான்றிதழ் சரிபார்த்தலும் பொருந்தும் என்றார் அவர்.
புதிய நடைமுறைகள் சுமுகமாக நடப்புக்கு வருவதையும் நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இடையூறுகளைக் குறைப்பதையும் அரசாங்கம் உறுதிசெய்யும்.
விண்ணப்பதாரர் குறிப்பிடும் விவரங்கள் நம்பகமானவையா என்பதை உறுதிசெய்வது நிறுவனங்களின் பொறுப்பு. மனிதவள அமைச்சும் அதன் தரப்பில் அவற்றைச் சரிபார்க்கும்.
இருப்பினும் போலியான கல்விச் சான்றிதழ் அடிப்படையில் வேலை அனுமதி அட்டை வழங்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பினர் மூலம் சரிபார்க்கும் கூடுதல் நடைமுறை அமையும் என்றார் அமைச்சர்.
இருப்பினும் துணை மதிப்பீட்டு முறையின்கீழ் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதிக்கான புள்ளிகள் சேர்க்கப்படுவதைச் சார்ந்திருக்க விரும்பாத நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை.
கல்விச் சான்றிதழ்களை மூன்றாம் தரப்பு சரிபார்க்கவேண்டி இருப்பதால் வேலை அனுமதி அட்டை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலம் அதிகரிக்குமா என்பது குறித்து டாக்டர் டான் விரிவாகத் தகவல் அளிக்கவில்லை.
இணையம் வழியாக சமர்ப்பிக்கப்படும் வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களின் முடிவுகள் தெரிய தற்போது 10 வேலை நாள்கள்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.


