இனவாதக் கருத்து: முன்னாள் விரிவுரையாளருக்கு ஐந்து வாரச் சிறை; $6,000 அபராதம்

இனவாதக் கருத்து: முன்னாள் விரிவுரையாளருக்கு ஐந்து வாரச் சிறை; $6,000 அபராதம்

1 mins read
7a6bea84-77bd-4f04-a3b1-d33f6e21d7d3
-

ஆர்ச்சர்ட் சாலையில் கடந்த ஆண்டு கலப்பின தம்பதியரிடம் இனவாதக் கருத்துகளைக் கூறிய நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியின் முன்னாள் மூத்த விரிவுரையாளர் டான் பூன் லீக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 29) ஐந்து வாரச் சிறைத்தண்டனையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அவர் இனவாதக் கருத்துகளைக் கூறியதைக் காட்டும் காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பரவலானது.

டான், 61, முன்னதாக இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தனிமனிதரின் இன உணர்வுகளைக் காயப்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டையும் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியின் பொறியியல் துறையில் விரிவுரையாளராக இருந்த டான், 2021 ஜூன் 5ஆம் தேதி, திரு டேவ் பர்காஷ் என்பவரிடம் இனவாதக் கருத்துகளைக் கூறினார்.

சிங்கப்பூரரான திரு பர்காஷ், அரை இந்தியரும் அரை பிலிப்பினோவும் ஆவார். அப்போது தம்முடைய காதலி ஜேக்வலின் ஹோவுடன் அவர் இருந்தார்.

ஆர்ச்சர்ட் பொலிவார்ட்டில் உள்ள கார் நிறுத்துமிடத்தை நோக்கி அத்தம்பதி நடந்து சென்றுகொண்டிருந்தபோது டானும் அவர்களும் சந்திக்க நேரிட்டது.

"என்ன ஓர் அவமானம், இந்திய ஆடவருடன் சீனப் பெண்," என்று அத்தம்பதியிடம் டான் கூறினார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தை குமாரி ஹோ காணொளியில் பதிவுசெய்தார். அந்த ஒன்பது நிமிடக் காணொளியை திரு பர்காஷ் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.