இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை காலை உச்ச நேரங்களில் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள எம்ஆர்டி நிலையங்களில் வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்தைய நிலையில் ஏறக்குறைய பாதியளவாக இருந்தது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள், ஊழியர்கள் வேலையிடத்துக்கு வந்துசெல்லும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காலை, மாலை உச்ச நேரங்களில் பொதுப் போக்குவரத்துப் பயணங்களின் எண்ணிக்கை சற்றே குறைந்திருப்பதைத் தரவு காட்டுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
2019 அக்டோபருடன் ஒப்புநோக்க, கடந்த அக்டோபரில் பேருந்துகள், ரயில்களில் மொத்த பயணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தது.
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், வாரநாள்களின் காலை உச்ச நேரங்களில் பொதுப் போக்குவரத்தில் சராசரியாக 1.22 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒப்புநோக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே காலகட்டத்தில் வாரநாள்களின் காலை உச்ச நேரங்களில் 1.57 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வாரயிறுதிகள் உட்பட வாரந்தோறும் நாள் முழுவதுக்குமான பொதுப் போக்குவரத்து பயணங்கள் சற்றே அதிகரித்தன. இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை அன்றாடம் சராசரியாக 6.31 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. கொவிட்-19க்கு முந்தைய நிலவரத்தில் இது 81.5 விழுக்காடாகும்.

