வேலையிட மரணங்கள் குறைந்தாலும் பெரிய அளவிலான காயங்கள் கூடின

வேலையிட மரணங்கள் குறைந்தாலும் பெரிய அளவிலான காயங்கள் கூடின

2 mins read
63b8816f-e588-4eea-b670-73dd1e361bd4
பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து நீடிப்பதாக தெரிகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்திய உயர் பாதுகாப்பு காலகட்டத்தில் மரணங்கள் குறைந்தன. இருந்தாலும், பெரிய அளவிலான காயங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் அதிகரித்தன.

பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து நீடிப்பதாக இதன்மூலம் தெரிகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் பாதுகாப்பு திட்டத்தை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியது.

2022 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரையில் மாதத்திற்கு சராசரியாக 49.1 பெரிய அளவிலான காயங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் 55.3ஆக இருந்தது என்று அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 19) வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

அண்மைய மாதங்களாக வேலையிடங்களில் நிகழும் மரணங்கள் குறைந்துள்ள வேளையில், உயர் பாதுகாப்பு காலகட்டத்தை பிப்ரவரிக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.

கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்பு 100,000 ஊழியர்களுக்கு 1.6 என்ற விகிதத்தில் வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.

கடுமையானப் பாதுகாப்பு அம்சங்களை மீறி உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் 100,000 ஊழியர்களுக்கு மரண விகிதம் 0.9க்கு குறைந்தது. இது, 2022 முழுவதும் 100,000 ஊழியர்களுக்கு 1.3ஆக இருந்தது.

2022ல் 46 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன. இதற்கு முன்பு கடைசியாக 2016ல் ஆக அதிகமாக 66 மரணங்கள் பதிவாகியிருந்தன.

இதற்கிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு ஸாக்கி, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கான அனைத்துலக ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

"உயர் பாதுகாப்பு காலகட்டம் சிந்திக்க நேரம் கொடுத்தது. நாம் என்ன வித்தியாசமாக செய்ய முடியும் என்பதைப் பற்றி ஆராய முடிந்தது," என்று திரு ஸாக்கி சொன்னார்.