கிச்சனர் ரோடு குடியிருப்பில் தீ; மருத்துவமனையில் எழுவர்

1 mins read
1cc08e85-96d5-4a4f-99e5-313a60e668a3
நண்பகல் 12.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஷின்டரோ டே -
multi-img1 of 2

கிச்சனர் ரோடு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இன்று புதன்கிழமை (08-02-2023) காலை தீ விபத்து நிகழ்ந்ததை அடுத்து, எழுவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த வீட்டின் வசிப்பறையில் மின்னூட்டி பொருத்தப்பட்டிருந்த மின்சைக்கிளில் தீப்பிடித்து, அதிலிருந்து தீ பரவியிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் காட்டுவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கிச்சனர் ரோடு புளோக் 2ன் 13ஆம் தளத்தில் அமைந்துள்ள அவ்வீட்டில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து காலை 11 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அதன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்லுமுன், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஏற்கெனவே 80 பேர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். பாதிக்கப்பட்ட வீடு மற்றும் அண்டை வீட்டில் இருந்து மேலும் எழுவரைக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் வெளியேற்றினர்.

அறுவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மூன்று, நான்கு முறை பெரும் சத்தம் கேட்டதாகக் கூறினார் அந்தக் கட்டடத்தின் ஏழாம் தளத்தில் வசிக்கும் திரு ஃபரூக் சம்சுதீன், 64.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா, நண்பகல் 12.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் குடியிருப்பாளர்களிடம் கூறினார்.