தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது மேற்கூரையின் சில பகுதிகள் பெயர்ந்து விழுந்தன.
ஊட்ரம் பார்க்கில் 31 டியோ ஹாங் சாலை என்ற முகவரியில் அமைந்துள்ள கடைவீட்டில் தீப்பற்றியதாக இன்று முற்பகல் 11.15 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், அந்தக் கடைவீட்டில் இருந்து கரும்புகை எழுந்ததைக் கண்டனர்.
அதைத் தொடர்ந்து, மூச்சுக்கருவி அணிந்துகொண்டு தீயணைப்பு வீரர்கள் அந்த வளாகத்தினுள் நுழைந்தனர்.
மேற்கூரை பெயர்ந்து விழுந்தபோது அவ்வீட்டின் மூன்றாம் தளத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவர் இருந்தனர்.
அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, துணை மருத்துவப் படையினரால் பரிசோதிக்கப்பட்டனர்.
சுயநினைவுடன் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலேசான சிராய்ப்புக் காயம் அடைந்த இன்னொருவர்க்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்தக் கடைவீட்டின் மூன்றாம் தளத்தையும் பரணையும் சூழந்த தீ, பிற்பகல் 1.15 மணிவாக்கில் முழுமையாக அணைக்கப்பட்டது.
தீப்பற்றியதை அடுத்து அவ்வீட்டில் இருந்தவர்கள் தாங்களே வெளியேறிவிட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளில் இருந்த 20 பேரைக் குடிமைத் தற்காப்புப் படையினர் வெளியேற்றியதாகவும் ஃபேஸ்புக் பதிவு வழியாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

