சிங்கப்பூரின் முக்கிய பொருளியல் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனங்கள், தங்கள் தொழில்துறைக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட சற்று கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படும்.
சிங்கப்பூரை போட்டித்தன்மையுடன் வைத்திருப்பதில் தங்கள் பங்கிற்கு அங்கீகரிக்கப்படும் அந்த நிறுவனங்கள், தற்போது அனுமதிக்கப்படுவதைவிட கூடுதலான எஸ்-பாஸ், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரை வேலைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பிலான அந்த நிறுவனங்களுக்கான வரம்பு, ஏற்கெனவே உள்ள தங்கள் அடிப்படை ஊழியரணியில் 5 விழுக்காடு வரை விரிவுபடுத்தப்படும். வேலைக்கு எடுக்கப்படக்கூடிய கூடுதல் ஊழியர்களின் எண்ணிக்கைக்கான வரம்பு 50 ஆக இருக்கும்.
உத்திபூர்வ பொருளியல் முன்னுரிமைகளுக்கான (M-SEP) மனிதவள திட்டத்தின்கீழ் இந்த ஏற்பாடு அமைகிறது.
மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) மாலை 4 மணி முதல் M-SEP திட்டத்திற்கு தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
M-SEP திட்டத்திற்கு தகுதிபெறுவதற்கான இரு நிபந்தனைகளில் முதலாவதைப் பூர்த்திசெய்ய, குறைந்தது ஒரு பொருளியல் திட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்கெனவே இருக்க வேண்டும். அல்லது, ஐந்து அரசாங்க அமைப்புகளில் ஏதேனும் ஒன்றால் குறிப்பிட்ட சில பொருளியல் தகுதிக்கூறுகளைப் பூர்த்தி செய்ததாகக் கருதப்பட வேண்டும்.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியன அந்த ஐந்து அமைப்புகள்.
கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் மூலம் பலனடையும் நிறுவனங்கள், சிங்கப்பூர் திறனாளர்களையும் பேண வேண்டும்.
M-SEP திட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள், முதலாவது நிபந்தனையைப் பூர்த்திசெய்த பிறகு, எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க விரும்புகின்றனவோ ஈராண்டுகளுக்குள் அதே எண்ணிக்கையிலான உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு எடுக்கவோ பயிற்சிக்கு அனுப்பவோ கடப்பாடு கொள்ளலாம். அவ்வாறு செய்வதன் மூலம் இரண்டாவது நிபந்தனையைப் பூர்த்திசெய்யலாம்.

