மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவேண்டும்: பிரதமர்

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவேண்டும்: பிரதமர்

2 mins read
29ca11da-0cd9-416c-8d82-0f60aacad075
45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: எஸ்பிஎச் மீடியா

ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் நடக்கும் போர்கள், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே வளர்ந்துவரும் நம்பிக்கையின்மையும் சந்தேகமும், தென்சீனக் கடல் விவகாரம் போன்ற பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மேம்பாட்டுக்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் ஆசியான் நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

பொருளியல் செயல்திறனையும் தடையற்ற வர்த்தகத்தையும் பொருட்படுத்தாமல் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் அதிகரித்துவருவதால் உலகளாவிய பொருளியல் விரிசல் கண்டு அனைவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் 45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் சுட்டினார்.

உறுப்பு நாடுகளின் குடிமக்களுக்கும் பங்காளித்துவ நாடுகளுக்கும் ஆசியான் பயனுள்ளதாக இருக்க அது முக்கியம் என்றார் அவர்.

வட்டாரத்திற்கு வெளியே நடக்கும் சண்டைகள் குறித்த நிலைப்பாடு, உறுப்பு நாடுகளுக்கிடையே வெவ்வேறாக இருந்தாலும் அந்த வேறுபாடுகளால் இலக்கின் மீதான கவனம் சிதைந்துவிடக்கூடாது என்று திரு வோங் வலியுறுத்தினார்.

ஆசியானின் ஒற்றுமை குறித்து விரிவாகப் பேசிய திரு வோங், அனைத்துலகச் சட்டத்திற்கு உட்பட்டு சச்சரவுகளுக்கும் அமைதியான முறையில் இணக்கம் காண வேண்டும் என்றும் அதற்குப் பங்காளிகளை உடன்பட வைக்கவேண்டும் என்றும் கூறினார்.

ஆசியானை மையமாகக் கொண்டு முக்கியத் தரப்புகளுடன் கலந்துறவாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பனிப்போர் காலத்துக்குப் பின், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர், கிழக்காசிய உச்சநிலை மாநாட்டை ஆசியான் நிறுவியதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகளும் கண்ணோட்டங்களும் மாறுபட்டாலும் முக்கியமான நாடுகளை ஒரே கூரையின்கீழ் கொண்டுவந்தால் நன்மை பயக்கும் என்று தலைவர்கள் நம்பினர்.

அவ்வகையில், தற்போதைய சூழலிலும் அத்தகைய பாணியைக் கையாளவேண்டும் என்று அவர் சொன்னார்.

வட்டார அளவிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் ஒற்றுமையுடன் இருப்பதால் பெரிய நாடுகள் இந்த வட்டாரம் மீது கொண்டுள்ள ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் மக்களுக்குத் தொடர்ந்து அமைதியையும் வளர்ச்சியையும் வழங்கமுடியும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, தீமோர் லெஸ்டே நாட்டை ஆசியானின் 11வது உறுப்பு நாடாக இணைப்பது குறித்தும் பேசிய பிரதமர், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் அந்நாட்டை இணைக்க முழு ஆதரவை நல்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நெருங்கிய அண்டை நாடான மலேசியா அடுத்த ஆண்டிற்கான ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்க இருப்பதை வரவேற்று, இன்னும் அணுக்கமான, அமைதியான, செழிப்பான ஆசியானை உருவாக்க இணைந்து செயல்பட சிங்கப்பூர் முனையும் என்றும் நம்பிக்கையளித்தார்.

குறிப்புச் சொற்கள்