பாசிர் ரிஸ் பூங்காவில் சிசு கண்டெடுப்பு; காவல்துறை விசாரணை

பாசிர் ரிஸ் பூங்காவில் சிசு கண்டெடுப்பு; காவல்துறை விசாரணை

1 mins read
5d9937a5-4b19-487a-9a77-b8103f31ef88
இந்த கான்கிரீட் பலகைக்கு அடியில் சிசு கண்டெடுக்கப்பட்டது. படம்: சாவ்பாவ் -

பாசிர் ரிஸ் பூங்காவில் சனிக்கிழமை இரவு சிசு ஒன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.

கடற்கரையில் 'பிபிகியூ பிட் 21'க்கு அருகே சிசு கண்டெடுக்கப்பட்டதாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு 10.13 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) கூறியது.

கான்கிரீட் பலகைக்கு அடியில் சிசு இருந்ததை 10 வயதுச் சிறுவன் கண்டறிந்ததாக சீன நாளிதழ் சாவ்பாவ் தெரிவித்தது.

தம்முடைய குடும்பத்தாருடன் பூங்காவில் முகாமிட்டிருந்த அச்சிறுவன், தம்முடைய தாயாரிடம் இதுகுறித்து தெரியப்படுத்தினான். அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

சிசு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு ஏழெட்டு காவல்துறை கார்களில் வந்த சுமார் 20 காவல்துறை அதிகாரிகள், அந்த இடத்தைச் சுற்றி தடுப்புவேலிகளை அமைத்ததாக இதை நேரில் கண்டவர் சாவ்பாவ் நாளிதழிடம் கூறினார்.

அங்கிருந்தவர்களிடம் பேசிய அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை கடற்கரையில் தேடினர்.

குழந்தை பிறப்பை வேண்டுமென்றே மறைப்பதற்காக, இறந்த குழந்தையின் உடலை ரகசியமாக அடக்கம் செய்வதோ அப்புறப்படுத்துவதோ குற்றமாகும்.

குற்றம் நிரூபணமானால், அதில் சம்பந்தப்பட்டவருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.