கடுமையான மூடுபனி காரணமாக சீனாவின் ஹினான் மாநிலம், ஸெங்ஸொவ் நகரில் பாலம் ஒன்றில் புதன்கிழமை (டிசம்பர் 28) காலை ஏற்பட்ட பெரிய விபத்தில் டசன் கணக்கான வாகனங்கள் சிக்கிக்கொண்டன.
ஸெங்ஸின் ஹுவாங்ஹெ பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் பல கார்களும் டிரக் வாகனங்களும் ஒன்றின்மேல் ஒன்றாக ஏறி நின்றன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பாலத்தில் தீயணைப்புத் துறையினர் இருந்ததை அரசாங்க ஊடகமான சிசிடிவியின் காணொளி காட்டியது.
சம்பவ இடத்தில் இருந்த மீட்புப் பணியாளர்களின் முன்னோட்ட கணிப்பின்படி, 200க்கும் அதிகமான வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் காயமுற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு 11 தீயணைப்பு வாகனங்களும் 66 தீயணைப்பு, மீட்புப் பணியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூடுபனி காரணமாக மேம்பாலத்தைக் கடக்க அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக உள்ளூர் போக்குவரத்து காவல்துறை இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் நோட்டீஸ் விடுத்ததாக ஸெங்ஸொவ் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்த பகுதியைப் படமெடுத்த ஓட்டுநர் ஒருவர், "இது மிகவும் பயங்கரமாக உள்ளது. இங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பாலத்திலிருந்து நாங்கள் வெளியேற முடியும் என்று எனக்கு தோன்றவில்லை," என்றார்.