உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய அர்ஜென்டின வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு

உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய அர்ஜென்டின வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு

1 mins read
bb4ce98c-5826-4922-975c-a4c1245d44de
கத்தாரிலிருந்து அர்ஜென்டினா திரும்பிய காற்பந்து வீரர்கள், தலைநகர் பியுனஸ் அய்ரெசில் திறந்தவெளி பேருந்தில் வலம் வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

உலகக் கிண்ணத்துடன் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) அதிகாலை நாடு திரும்பிய அர்ஜென்டினா காற்பந்து வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்றுள்ளனர்.

உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வென்றதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் தலைநகர் பியுனஸ் அய்ரெஸ் கொண்டாட்ட உணர்வில் திளைத்து வருகிறது.

கடைசியாக 1986ல் காலஞ்சென்ற டியேகோ மாரடோனா தலைமையிலான அர்ஜென்டின அணி கிண்ணத்தை வென்றிருந்தது. இப்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கிண்ணம் அர்ஜென்டினாவிடம் வந்துசேர்ந்துள்ளது.

வெற்றியாளர் பதக்கங்களை அணிந்திருந்த வீரர்கள், ஒருவர் மாற்றி ஒருவராக கிண்ணத்தைக் கையில் ஏந்தினர். திறந்தவெளி பேருந்தில் வீதிகளை வலம்வந்த அவர்கள், ரசிகர்களை நோக்கி கையசைத்தனர்.

தங்கள் நாயகர்களைக் காண வெள்ளமென திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் கைபேசிகளில் இருந்து ஒளிவெள்ளம் வீசியது. வாணவேடிக்கைகள் அதிகாலை பொழுதைப் பகலாக்கின.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து புறப்பட்ட விமானம், இத்தாலி தலைநகர் ரோமில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு பியுனஸ் அய்ரெசில் தரையிறங்கியது.