தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிரம்பி வழியும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள்

2 mins read
e6ec96a8-73b4-4c06-bc84-95f87322e419
வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, ஏழு அல்லது அதற்குமேல் வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் அனைத்துத் தங்குவிடுதிகளும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் சட்டத்தின்கீழ் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகள் அனைத்தும் முழுக் கொள்ளளவுடன் இயங்கி வருகின்றன.

கொவிட்-19 பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு கட்டுமானத் துறை மீண்டும் முந்திய நிலைக்குத் திரும்பியதால் அதிகமான ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 'பிபிடி' எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கென கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் காலியாக இருந்த 256,000 படுக்கைகளும் விரைவில் நிரம்பிவிட்டன என்றும் வாடகையும் உயர்ந்துவிட்டது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

"நான் அறிந்தமட்டில், 'பிபிடி' தங்குவிடுதிகளில் ஊழியர் ஒருவரைத் தங்கவைப்பதற்கான செலவு 50 வெள்ளி முதல் 100 வெள்ளிவரை ஏறிவிட்டது," என்றார் நீ செங் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மனிதவள, செயல்பாட்டு நிர்வாகி ஸ்டேன்லி சோ, 43.

தங்களது தொழிற்சாலை வளாகத்திலேயே அதிகப் படுக்கைகளைப் போட்டுக்கொள்ள சில நிறுவனங்கள் அனுமதி கேட்டபோதும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சௌதர்ன் ஏர்கண்டிஷனிங் எஞ்சினியரிங் நிறுவனத்தின் இயக்குநர் ஜோலென் டியோ, 59.

இதனிடையே, புதிய தற்காலிகத் தங்குவிடுதிகளுக்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்ட 13 பகுதிகளில் மூன்று ஆண்டுகள்வரை அவற்றை அமைத்துக்கொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் இவ்வாண்டு பிப்ரவரியில் அறிவித்து இருந்தது.

ஆனாலும், இந்த நடவடிக்கை இப்போது காணப்படும் கடுமையான நிலையைத் தணிக்காது என்று எதிர்பார்ப்பதாக தங்குவிடுதித் தரப்பினர் சொல்கின்றனர்.

இப்போதைக்கு 53 'பிபிடி' தங்குவிடுதிகளும் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

"2025ஆம் ஆண்டுவரை புதிய தங்குவிடுதிகள் எதுவும் வராது என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், படுக்கை எண்ணிக்கை இதே அளவில் இருக்கலாம் அல்லது இன்னும் குறையலாம்," என்று சிங்கப்பூர் தங்குவிடுதிகள் சங்கத்தின் (டிஏஎஸ்எல்) பேச்சாளர் கூறினார்.