மாற்றி எரியூட்டப்பட்ட உடல்; துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தார்

82 வயதான திரு கீ கின் தியோங் இறந்துவிட்ட துக்கத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடலை எதிர்பார்த்துக் காத்திருந்த அவரது குடும்பத்தாருக்கு, ஈமச்சடங்கு சேவை நிறுவனத்திடமிருந்து அதிர்ச்சியூட்டும் செய்திதான் வந்து சேர்ந்தது.

ஊழியர் ஒருவரின் கவனக்குறைவால், கிறிஸ்துவ சமயத்தவர் ஒருவரின் உடலுக்குப் பதிலாக திரு கீயின் உடல் கடந்த 30ஆம் தேதி எரியூட்டப்பட்டுவிட்டதாக ஹார்மனி ஃபியூனரல் கேர் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அந்தச் செய்தி குறிப்பிட்டது.

தாவோ சமயத்தைப் பின்பற்றும் திரு கீயின் உடலுக்கு கிறிஸ்துவ முறைப்படி ஈமச் சடங்குகள் செய்தது அந்தக் குடும்பத்தை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது.

தாவோ சமய வழமைப்படி, இறந்தவரின் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் எரியூட்டப்படும். அதனைக்கூட திரு கீக்கு செய்ய முடியாமல் போனதாக அவரது மருமகன் திரு ஹோ மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார்.

“இந்தச் சம்பவத்தின் காரணமாக எங்கள் அன்புக்குரிய அவரது உடலை குடும்பத்தார் யாரும் உடனிருந்து அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்காக மிகவும் வருந்துகிறோம்,” என்றார் திரு ஹோ.

அந்த ஈமச் சடங்கு நிறுவனத்தைச் சேர்ந்த ஆண் ஊழியர் திரு கீயின் பதப்படுத்தப்பட்ட உடலைத் தவறுதலாகப் பெற்று மூடப்பட்ட சவப்பெட்டி ஒன்றில் வைத்துவிட்டதாகவும் 70 வயதான ஆடவர் ஒருவரின் சடலம் என்று கருதி அது எடுத்துச் செல்லப்பட்டு கிறிஸ்துவ சமய முறைப்படி அது எரியூட்டப்பட்டுவிட்டதாகவும் திரு ஹோ, 48 குறிப்பிட்டார்.

இவ்விருவரது உடலும் ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்ததால் இந்தக் குழறுபடி நேர்ந்ததாகத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ குடும்பத்துக்கு இந்த குளறுபடி பற்றி தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அந்த ஈமச்சடங்கு நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

முக அடையாளத்தைவைத்து பெறப்பட்ட உடல் உறுதிசெய்யப்பட்டதாக திரு கீயின் குடும்பத்தாரிடம் அந்த ஆண் ஊழியர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டது ஹார்மனி ஃபியூனரல் கேர் நிறுவனம்.

சின் மின் டிரைவில் இருக்கும் அந்த நிறுவனத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த வியாழன், வெள்ளிக் கிழமைகளில் சென்றபோது, இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, செஞ்சுரி புராடக்ட்ஸ் ஈமச்சடங்கு நிலையத்தின் உரிமத்தை ரத்து செய்திருப்பதாகவும் அதன் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்றும் இன்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் கையாளப்படும் உடல்கள் தொடர்பான தகவல்கள் சரிவர ஆவணப்படுத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக வாரியம் குறிப்பிட்டது.

கடந்த 31ஆம் தேதி அந்த வளாகத்தை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டபோது விதிமீறல்கள் உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உடலைப் பதப்படுத்தும் வசதியுள்ள ஈமச்சடங்கு நிலையங்கள் உரிய ஆவணங்களை வைத்திருப்பதையும் சுற்றுப்புற தூய்மைத் தரத்தைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஹார்மனி ஃபியூனரல் கேர் நிறுவனத்தின் இயக்குநரிடமும் வாரியம் விசாரணை மேற்கொண்டது. உடலைக் கையாளுவதன் தொடர்பிலான குறைபாடுகளே இந்த “அதிர்ச்சியளிக்கும் தவறுக்கு,” காரணம் என்றது வாரியம்.

மண்டாய் தகனச்சாலை, சுவா சூ காங் தகனச்சாலை மற்றும் கல்லறை ஆகியவற்றில் இருக்கும் அரசாங்கத்தின் வசதிகளை ஹார்மனி ஃபியூனரல் கேர் நிறுவனம் பயன்படுத்த வாரியம் தடை விதித்துள்ளது. இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்திருப்பதை அந்த நிறுவனம் உறுதிசெய்த பிறகே இந்தத் தடை நீக்கப்படும் என்று வாரியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திரு கீயின் குடும்பத்தார் இதன் தொடர்பில் போலிசில் புகார் அளித்துள்ளனர். சட்ட உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.

மண்டாய் தகனச்சாலையிலிருந்து அந்தக் குடும்பத்தார் அஸ்திக் கலசம் ஒன்றைப் பெற்றுள்ளனர். “எரியூட்டப்பட்டது எங்களது தாத்தாவின் உடல்தானா என்பதைக்கூட எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இத்தகைய துன்பத்துக்கு வேறு எந்தக் குடும்பமும் ஆளாகக்கூடாது,” என்று திரு கீயின் 29 வயது பேத்தி ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!