பாசிர் ரிஸ்ஸில் அடுக்குமாடி கார்ப்பேட்டையிலிருந்து விழுந்த சிறுமி மரணம்

பாசிர் ரிஸ்ஸில் அடுக்குமாடி கார்ப்பேட்டையிலிருந்து விழுந்த சிறுமி மரணம்

1 mins read
0a25b1ee-e0ad-4039-a6d3-1632f9a8b493
அடுக்குமாடி கார்ப்பேட்டையின் ஆறாவது மாடியில் அந்தச் சிறுமி சைக்கிளோட்டிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த தடுப்பில் மோதி, பின்னர் கீழே விழுந்தார் என நம்பப்படுவதாக சீன நாளிதழான ஷின் மின் தெரிவித்தது. படம்: ஷின் மின் நாளிதழ் -

பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ல் இருக்கும் புளோக் 526A-ல் அடுக்குமாடி கார்ப்பேட்டையின் கீழே உள்ள புல் தரையில் அசைவின்றிக் கிடந்த 13 வயதுச் சிறுமி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 9) மாலை 4 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து மாலை 4.04 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

அடுக்குமாடி கார்ப்பேட்டையின் ஆறாவது மாடியில் அந்தச் சிறுமி சைக்கிளோட்டிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த தடுப்பில் மோதி, பின்னர் கீழே விழுந்தார் என நம்பப்படுவதாக சீன நாளிதழான ஷின் மின் தெரிவித்தது.

ஷெர்ரி என்று அறியப்படும் இல்லப் பணிப்பெண் ஒருவர், தாம் குளித்துவிட்டு வெளியில் வந்தபோது பலத்த சத்தத்தைக் கேட்டதாகச் சொன்னார்.

வெளியில் எட்டிப் பார்த்தபோது, பலமாடி கார்ப்பேட்டையின் கீழே, சிறுமி விழுந்துகிடந்ததைக் கண்டதாக அந்த 39 வயது பணிப்பெண் குறிப்பிட்டார். அவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் போலிசுக்கும் இது குறித்து தகவல் அளித்தார்.

அந்தச் சிறுமி சற்றுப் பருமனாகவும், குட்டையான கூந்தலுடனும் இருந்ததாக மற்றொரு குடியிருப்பாளரான திருவாட்டி ஹி குறிப்பிட்டார்.

"மல்லாந்து கிடந்த அந்தச் சிறுமியின் தலையில் அடிபட்டிருக்கலாம்," என்று அந்த 70 வயது இல்லத்தரசி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, சிறுமி தன் நண்பர்களுடன் அடுக்குமாடி கார்ப்பேட்டையில் விளையாடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity