சிங்கப்பூரின் தென்தீவுகளுக்கு அருகே நீரில் விழுந்த துறைமுக மாலுமி மரணம்

சிங்கப்பூரின் தென்தீவுகளுக்கு அருகே நீரில் விழுந்த துறைமுக மாலுமி மரணம்

1 mins read
b0c675c0-3f5b-4d3d-b7e7-75ec6a6cad06
வேறொரு படகில் ஏறுவதற்காக இழுவைப் படகிலிருந்து இறங்கிக்கொண்டு இருந்தபோது மாலுமி நீருக்குள் விழுந்துவிட்டார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'பிஎஸ்ஏ மரின்' நிறுவனத்தைச் சேர்ந்த துறைமுக மாலுமி (ஹார்பர் பைலட்) ஒருவர், சிங்கப்பூரின் தென்தீவுகளுக்கு அருகே சனிக்கிழமை (பிப்ரவரி 11) இழுவைப் படகிலிருந்து தவறி நீரில் விழுந்ததில் உயிரிழந்தார்.

சனிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

'பிஎஸ்ஏ மரின்' நிறுவனத்துக்குச் சொந்தமான வேறொரு படகில் ஏறுவதற்காக இழுவைப் படகிலிருந்து இறங்கிக்கொண்டு இருந்தபோது அவர் நீருக்குள் விழுந்துவிட்டார்.

துறைமுகம் போன்ற ஆபத்தான அல்லது நெரிசல்மிகுந்த நீரிணையில் கப்பல்களைப் பாதுகாப்பாக இயக்கும் திறன்பெற்ற நிபுணராவார் துறைமுக மாலுமி.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த மாலுமி உயிர்க் கவசம் அணிந்திருந்தார்.

இதுகுறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "தேடுதல், மீட்புப் பணியை நடத்துவதற்காக கடல்துறை, துறைமுக ஆணையம், கடலோரக் காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை சுற்றுக்காவல், அவசரகால ஊழியர்களை உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தின," என்றது.

"காணாமல்போன மாலுமியை நீருக்குள் தேட முக்குளிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேடுதல் பணிகளுக்கு உதவ அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது," என்றும் ஆணையம் கூறியது.

அந்த மாலுமியின் சடலம் சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் மீட்கப்பட்டு, பிராணித் தீவில் உள்ள கடலோரக் காவல் படையின் தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.