வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளை முதல்முறையாக வாங்கும் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளது.
நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடுகளை வாங்கும் குடும்பங்களுக்கு கூடுதலாக $30,000 வீடமைப்பு மானியத் தொகை வழங்கப்படும். ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுகளை வாங்குவோருக்கு கூடுதலாக $10,000 மானியம் வழங்கப்படும்.
இளம் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள், திருமணமான 40 வயது மற்றும் அதற்கும் குறைந்த வயதுடைய இளம் தம்பதியர் ஆகியோர் தங்களின் முதல் வீட்டை வாங்கும்போது தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீட்டு (பிடிஓ) திட்டத்தின்கீழ் மேலும் ஒரு குலுக்கல் வாய்ப்பைப் பெறுவர்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) தமது வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்.
மாற்றியமைக்கப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத் திட்டத்தின்படி ஈரறை, மூவறை அல்லது நான்கறை வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்கும் குடும்பங்களுக்கு $50,000க்குப் பதிலாக $80,000 கிடைக்கும்.
ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுகளை வாங்குவோருக்கு $40,000க்குப் பதிலாக $50,000 வழங்கப்படும்.
மானியத் திட்டத்திற்குத் தகுதிபெற, குடும்பத்தில் குறைந்தது இரண்டு சிங்கப்பூரர்கள் அல்லது ஒரு சிங்கப்பூரர், ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி இருக்க வேண்டும்.
அத்துடன், இதற்குமுன் வீடமைப்பு தொடர்பான நிதியுதவியை அவர்கள் பெற்றிருக்கக்கூடாது; மாத வருமானம் $14,000க்கு மேல் இருக்கக்கூடாது. மேலும், வீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதற்குக் கடந்த 30 மாதங்களில் தனியார் வீட்டு உரிமையாளராக இருந்திருக்கக்கூடாது.
முதல்முறை வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்கும் ஒற்றையர்களுக்கும் கூடுதல் மத்திய சேம நிதி வீடமைப்பு மானியங்கள் வழங்கப்படவுள்ளது. நான்கறை மற்றும் அதற்கும் சிறிய வீடுகளை வாங்குவோருக்கு $25,000லிருந்து $40,000 மானியமும் ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுகளை வாங்குவோருக்கு $20,000லிருந்து $25,000 மானியமும் வழங்கப்படும்.
மறுவிற்பனை விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியிலிருந்து சமர்ப்பித்தோர் இந்தக் கூடுதல் மானியத்திற்குத் தகுதிபெறலாம்.
வீவக மறுவிற்பனை வீடுகளை மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத் திட்டத்தின்கீழ் முதல் முறை வாங்கும் குடும்பங்கள் $80,000 மானியமும் ஒற்றையர்கள் $40,000 மானியமும் பெறலாம்.
நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத்தின்கீழ் குடும்பங்கள் $30,000 தொகையையும் ஒற்றையர்கள் $15,000 தொகையையும் கோரலாம்.
எனவே, மறுவிற்பனை வீட்டை முதல் முறை வாங்கும் குடும்பங்கள் $190,000 வரையிலும் முதல் முறை வாங்கும் ஒற்றையர்கள் $95,000 வரையிலும் மானியம் பெறக்கூடும்.

