இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து நீண்டகால அனுமதி அட்டைகள் (Long-Term Pass) மின்னிலக்க வடிவில் (digital) மட்டுமே வழங்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்பின் அச்சுவடிவில் (Physical) நீண்டகால அனுமதி அட்டைகளை வழங்குவதை ஆணையம் நிறுத்திக்கொள்ளப் போகிறது.
ஆணையம் வழங்கும் நீண்டகால வருகை அனுமதி அட்டை (Long-Term Visit Pass), மாணவர் அனுமதி அட்டை (Student's Pass) மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வழங்கும் சார்ந்திருப்போர் அடையாள அட்டை (Dependant's Pass) ஆகியவற்றுக்கு இது பொருந்தும்.
நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து 'MyICA' கைப்பேசிச் செயலி, குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் இணையத்தளத்தில் (www.ica.gov.sg) 'MyICA' மின்சேவை அல்லது 'FileSG' வழியாக மின்னிலக்க நீண்டகால அனுமதி அட்டையை எளிதாகப் பெறலாம்.
சிங்பாஸ் கணக்கு வைத்திருக்கும் நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள், சிங்பாஸ் செயலியிலும் தங்களது மின்னிலக்க நீண்டகால அனுமதி அட்டையைக் காணலாம்.
இம்மாதம் 27ஆம் தேதிக்குமுன் வழங்கப்பட்ட/வழங்கப்படும் அச்சுவடிவிலான நீண்டகால அனுமதி அட்டைகள் அவை காலாவதியாகும்வரை அல்லது ரத்து செய்யப்படும்வரை செல்லுபடியாகும்.

