குடிநீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் இந்தியா

2 mins read
5c4fed68-5908-4939-ae36-3d702a8605da
இந்தியாவில் இவ்வாண்டு பருவமழை குறைவாகப் பொழியலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கோப்புப்படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் முக்கிய நீர்நிலைகளில் கடந்த ஆண்டைவிட இப்போது நீர்மட்டம் குறைவாக இருக்கிறது. இதனால், வரும் கோடைக் காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த குளிர்காலத்தில் குறைவான அளவு மழை பெய்ததும் பிப்ரவரியில் இதற்குமுன் இல்லாத வெயில் வாட்டியதுமே நீர்நிலைகளில் நீர் குறைவாக இருப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதனால், மண்ணின் ஈரப்பதம் குறைந்து வருவதால் வேளாண் குடிமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அத்துடன், இது குடிநீர் விநியோகத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மத்திய நீர் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த நீர்மட்டத்தில் இப்போது 92 விழுக்காடே இருக்கிறது.

அதாவது, 143 முக்கிய நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 94. 03 பில்லியன் கனமீட்டர் நீர் இருந்த நிலையில், இம்மாதம் 9ஆம் தேதிவாக்கில் 86.45 பில்லியன் கனமீட்டர் நீரே இருந்தது.

வடஇந்தியாவைத் தவிர்த்து, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவிலுள்ள நீர்த்தேக்கங்களில் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு நீரளவு குறைவாக இருக்கிறது.

குறிப்பாக, கிழக்கு இந்தியாவில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு, கடந்த பத்து ஆண்டுகளில் இருந்த சராசரி நீரின் அளவில் பாதியளவுகூட இப்போது இல்லை.

இதனிடையே, இவ்வாண்டு பருவமழையும் குறைவாகப் பொழியலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். `எல் நினோ' காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை குறைவாக இருக்கலாம் என்று அனைத்துலக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால், தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.