எம்.பி. தகுதியை இழந்தார் ராகுல் காந்தி

எம்.பி. தகுதியை இழந்தார் ராகுல் காந்தி

1 mins read
f4953ce1-3f6c-4779-be2f-5e93e7f24b99
ராகுல் காந்தியைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, இந்திய நாடாளுமன்றம் முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தியாவின் எதிர்த்தரப்பு காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம், அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்தியைக் குற்றவாளி என்று முடிவு செய்து, அவருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்தது.

அதனையடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக மக்களவைச் செயலகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தகுதிநீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அமலுக்கு வருகிறது என்றும் செயலகம் தெரிவித்தது.

ராகுல் காந்தி, 52, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசியபோது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும் அதன்மூலம் அவர் பிரதமர் மோடியை மறைமுகமாகச் சாடியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாகப் பிணையும் வழங்கியது.

ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது கட்சியினரிடையே மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.