நேப்பாள விமான விபத்து: உறையவைக்கும் காணொளி

நேப்பாள விமான விபத்து: உறையவைக்கும் காணொளி

2 mins read
b6bcef65-6414-47b5-a73a-e7b427d860fe
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பொக்காரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே துயரம் தாங்காமல் கதறி அழுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

நேப்பாளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) காலை நடுவானில் வெடித்துச் சிதறிய விமானத்தில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், தேடுதல் பணி தொடர்கிறது. உருத் தெரியாமல் அழிந்த 'யெட்டி ஏர்லைன்ஸ்' விமானம் விழுந்து நொறுங்கியபோது அதில் 72 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திங்கள்கிழமை (ஜனவரி 16) மாலை நிலவரப்படி 68 பேர் மாண்டுவிட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிலிருந்து சடலங்களை மீட்க நேப்பாள ராணுவ வீரர்கள் கயிறுகளையும் தூக்குப் படுக்கைகளையும் பயன்படுத்தினர்.

மீட்புப் பணிகள் இடைவிடாது நடைபெறுவதாக நேப்பாள அதிகாரிகள் கூறினர். இருப்பினும், நேரம் ஆக ஆக உயிர் பிழைத்தோரைத் தேடும் நம்பிக்கை குறைந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

1992ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே நேப்பாளத்தில் நிகழ்ந்த ஆக மோசமான விமானப் பேரிடர்.

அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை பொக்காரா நகரை நெருங்கியபோது அதில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காணொளி காட்டும் பயங்கரம் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு இளையர்கள், விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் எடுத்த காணொளியில் பதிவான காட்சிகள் பார்ப்பவரின் மனதை உறையவைத்துள்ளன.

நால்வரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் காணொளியில் காண முடிந்தது.

சன்னல் ஓரமாக அமர்ந்திருந்த ஒருவர் காணொளி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வெடிப்பு ஏற்பட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம் தீப்பிடித்துக்கொண்டது. அதில் இருந்தோரின் அலறல் சத்தத்தை அந்தக் காணொளியில் தெளிவாகக் கேட்க முடிந்தது.

இதற்கிடையே, விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுவிட்டதாகவும் இந்தத் துயரச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மாண்டோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேப்பாளத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 16) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.