தமிழக ஆடவரைச் சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியக் காவல்துறை

தமிழக ஆடவரைச் சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியக் காவல்துறை

1 mins read
de37cd8e-71c8-43a6-b201-463e32c4107b
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ரத்தம் தோய்ந்த துணியைச் சேகரிக்கும் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையின் தடயவியல் அதிகாரி. படம்: சிட்னி மார்னிங் ஹெரால்டு -

சிட்னி: தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த தமிழக ஆடவர் ஒருவரை அந்நாட்டுக் காவல்துறை நேற்று செவ்வாய்க்கிழமை (28-02-2023) சுட்டுக்கொன்றது.

முகம்மது ரகமத்துல்லா சையது அகமது, 32, என்ற அந்த ஆடவர், சிட்னி ரயில் நிலையம் ஒன்றில் துப்புரவாளர் ஒருவரை ஆயுதத்தால் குத்தியதாகவும் அதன்பின் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் அந்த 28 வயது துப்புரவாளரைக் குத்தியபின், அகமது ஆபர்ன் காவல் நிலையத்திற்குச் சென்றதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

அப்போது, அந்தக் காவல் நிலையத்தில் இருந்து வெளியே இரு அதிகாரிகளை அகமது எதிர்கொண்டதாகவும் பின்னர் அவர்களைத் தாக்க முற்பட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

அப்போது அவ்வதிகாரிகளில் ஒருவர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாகவும் அவற்றில் இரு குண்டுகள் அகமதின் நெஞ்சில் பாய்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

அவ்விடத்திலேயே அகமதுக்குத் துணை மருத்துவப் படையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

சிட்னியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், அகமது சுடப்பட்டு இறந்ததை உறுதிப்படுத்தியது.

இதனிடையே, அகமதால் தாக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

அகமதும் அந்த ஆடவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.