தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எரிவாயு தீச்சம்பவத்தில் இந்தியர் உயிரிழப்பு: இவ்வாண்டின் 46வது வேலையிட மரணம்

1 mins read
a25a71a1-27be-4c9b-b1c5-091dcaa2a48e
துவாஸ் அவென்யூ 3ல் அமைந்துள்ள 'ஏஷியா டெக்னிக்கல் கேஸ்' நிறுவனத்தில் நேற்று மூண்ட தீயில் 38 வயது இந்திய ஆடவர் உயிரிழந்தார். படம்: சாவ்பாவ் -

எண் 21 துவாஸ் அவென்யூ 3ல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 38 வயது இந்திய நாட்டவர் உயிரிழந்தார். அது, இவ்வாண்டு வேலையிடத்தில் ஏற்பட்ட 46வது உயிரிழப்பாகும்.

காலை 9.25 மணிக்கு ஏற்பட்ட இந்த தீச்சம்பவம், சிலிண்டர்களில் இருந்து acetylene எனும் எரிவாயு கட்டுக்கடங்காமல் வெளியானதால் ஏற்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மனிதவள அமைச்சு சனிக்கிழமை கூறியது.

காலை 9.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தில் காயமுற்ற மற்றோர் ஊழியர் 43 வயது சீன நாட்டவர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.

எரிவாயு சிலிண்டர்களின் சரிபார்ப்பு, பழுபார்ப்பு தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு Asia Technical Gas நிறுவனத்திடம் மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

"எரியக்கூடிய எரிவாயுவைக் கொண்ட சிலிண்டர்களைக் கையாளும்போது, அத்தகைய எரிவாயு திரள்வதைத் தவிர்க்க நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்," என்று அமைச்சு அறிவுறுத்தியது.

இந்நிலையில், இவ்வாண்டு வேலையிடத்தில் 46 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, 2016க்குப் பிறகு ஆக அதிகமாகும். அப்போது 66 வேலையிட மரணங்கள் பதிவாகியிருந்தன.

ஊழியர்களும் பொதுமக்களும் பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்து mom.gov.sg/report-wsh-issues எனும் இணையப்பக்கத்தில் அல்லது 6438-5122 எனும் எண்ணில் அமைச்சிடம் தெரியப்படுத்தலாம்.